Post

Share this post

‘விட்னஸ்’ – திரை விமர்சனம்

நீச்சல் வீரரான தனது மகன் மலக்குழிக்குள் இறக்கிவிடப்பட்டு கொல்லப்படுகிறார் என்பதை அறிந்த அவரது தாய் ரோகிணி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தாரா இல்லையா என்பதே விட்னஸ் திரைப்படத்தின் கதை.
இந்தத் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். அவருடன் விக்ரம் வேதாவில் நடித்த ஷர்தா ஸ்ரீநாத், சமூக செயற்பாட்டாளர் செல்வா, சண்முகராஜன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்குநர் தீபக் இயற்றியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தின் கதை வரியைக் கேட்பதற்கு வழக்கமான கதைதானே என்று தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால் தினசரி வாழ்வில் நடக்கும், ஒரு சமூக மக்களைத் தவிர வேறு யாரும் சந்தித்தே இராத சிக்கலை பேசுவதில் வெற்றியடைந்துள்ளது விட்னஸ் திரைப்படம். மலக்குழி மரணங்கள் இந்தியாவில் தினசரி நடந்துவரும் நிலையில் இதுவரை சினிமாக்களில் பேசப்படாத பல பரிமாணங்களை பேசியுள்ளது இத்திரைப்படம்.
இந்திராணியாக வரும் நடிகை ரோகிணியின் நடிப்பு ஆச்சர்யப்படத்தக்க அளவில் அமைந்துள்ளது. மகனை இழந்து தவிக்கும் இடமாகட்டும், அதற்காக போராடத் துணிவதாகட்டும், காவல்துறையிடம் நீதிக்காக மல்லுக்கட்டுவதாகட்டும் தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார். ஒன்றுமே தெரியாத இடத்திலிருந்து தனக்கான சம்பளத்தைப் பெறுவதற்காக மறியல் பண்ணுவது வரை மிகச்சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஷர்தா ஸ்ரீநாத், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக வரும் செல்வா, வழக்கறிஞராக வரும் சண்முகராஜன் என அளவான மற்றும் தேவையான கதாபாத்திரங்கள் வடிவமைப்பு திரைக்கதைக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சாதியினர் மேல் மட்டும் திணிக்கப்படும் மலம் அள்ளும் தொழில், அதைச் சுற்றிய அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்கள், அதனை எதிர்த்தால் சந்திக்க நேரும் இன்னல்கள் என பலவற்றையும் காட்சிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் தீபக். கொஞ்சம் தடுமாறினாலும் பிரசார தொணி தொற்றிக் கொள்ளும் அபாயம் கொண்ட இந்தக் கதையில் அதனை சாதுர்யமாக சமாளித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மலக்குழி மரணங்கள் ஏன் குற்றங்களாகக் கருதப்பட்டு தண்டனைகள் பெற முடிவதில்லை என விளக்கும் அதே வேளையில் தூய்மைப் பணியாளர்களின் தினசரி பிரச்னைகள், பணியிட சிக்கல்கள், அவர்களுக்கு ஆதரவானவர்களின் மீதான தாக்குதல்கள் என பேச வேண்டிய விஷயங்களை கதையின் ஓட்டத்துடன் இணைந்து பேசியது பாராட்டத்தக்கது.
கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள ஆச்சர்யம் திரையில் புதிய காட்சி அனுபவம். “கட்டடம் அவங்களது, காசு அவங்களது, அவங்க உருவாக்கற வேஸ்ட் மட்டும் மத்தவங்களதா?” , “உன் கை நீளும்போது என் வாய் நீளக்கூடாதா?” போன்ற வசனங்கள் அழுத்தம் நிறைந்தவையாக உள்ளன.
சில இடங்களில் காட்சி உருவாக்கத்தில் சற்று கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம் எனத் தோன்றினாலும் அவை எதுவும் காட்சியை பாதிக்கவில்லை. நீதிமன்றக் காட்சிகள் வழக்கமான தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பாடல்கள் ஓகே ரகம், அதேசமயம் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு உதவியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நம்மில் பலரும் குற்ற உணர்வுக்குள்ளாக நேரலாம். மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமையை கண்டும் காணாமல் செல்லும் சமூகத்தின் மத்தியில் இதனை கதையாக்கி அதன் வீரியத்துடன் திரையில் கடத்தியதற்காகவே இயக்குநரை பாராட்டலாம். விட்னஸ் இந்த ஆண்டின் சிறந்த சமூக அக்கறை கொண்ட சினிமா என்பதில் சந்தேகமில்லை.

Recent Posts

Leave a comment