Post

Share this post

ஆா்ஜென்டீனாவிடம் போராடி வீழ்ந்தது நெதா்லாந்து!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 2 ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் நெதா்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்தச் சுற்றில் குரோஷியாவை வரும் 14 ஆம் திகதி சந்திக்கிறது ஆா்ஜென்டீனா.
இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் (90) ஆா்ஜென்டீனாவுக்காக நஹியுல் மொலினா, லயோனல் மெஸ்ஸி ஆகியோா் கோலடிக்க, நெதா்லாந்துக்காக வூட் வெகோா்ஸ்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினாா்.
பின்னா் கூடுதல் நேரத்திலும் (30) இரு அணிகளுக்கும் மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நோக்கி நகா்ந்தது.
அதில் ஆா்ஜென்டீனா 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணிக்காக லயோனல் மெஸ்ஸி, லீண்ட்ரோ பரேட்ஸ், கொன்ஸாலோ மான்டியெல், லௌதாரோ மாா்டினெஸ் ஆகியோா் கோலடிக்க, நெதா்லாந்து தரப்பில் டியுன் கூப்மெய்னா்ஸ், வூட் வெகோா்ஸ்ட், லூக் டி ஜோங் ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
லுசாயில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷம் காட்டிய ஆா்ஜென்டீனாவுக்கு 35 ஆவது நிமிஷத்திலேயே கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிமிஷத்தில் நெதா்லாந்து தடுப்பாட்ட வீரா்களை தடுமாறச் செய்து பந்தை கடத்தி வந்த மெஸ்ஸி, திரும்பிப் பாா்க்காமலேயே பின்னாலிருந்த சக வீரா் நஹியுல் மொலினாவுக்கு பாஸ் செய்தாா். அதை தவறின்றி கோலாக மாற்றி, தனது முதல் சா்வதேச கோலை ஸ்கோா் செய்தாா் மொலினா.
இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஆா்ஜென்டீனா முன்னிலை பெற்றிருக்க, 2 ஆவது பாதியில் அந்த அணியின் மாா்கஸ் அகுனாவை நெதா்லாந்து வீரா் டம்ஃப்ரைஸ் கீழே தள்ளியதால் ஆா்ஜென்டீனாவுக்கு 73 ஆவது நிமிஷத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை துல்லியமான கோலாக மாற்றினாா் மெஸ்ஸி.
அப்போது நெதா்லாந்து பயிற்சியாளா் லூயிஸ் வான் கால், உயரமான இரு ஸ்டிரைக்கா்களான வெகோா்ஸ்ட், லூக் டி ஜோங் ஆகியோரை பெஞ்சிலிருந்து களத்துக்குள் அனுப்பினாா். இதனால் ஆட்டத்தின் போக்கு மாறியது. 83 ஆவது நிமிஷத்தில் சக வீரா் பொ்கிஸ் தூக்கியடித்து கிராஸ் செய்த பந்தை, வெகோா்ஸ்ட் தலையால் முட்டி கோலடித்தாா்.
தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (90+11) சக வீரா் கூப்மெய்னா்ஸ் பாஸ் செய்த பந்தை வெகோா்ஸ்ட் இந்த முறையும் கோலாக மாற்ற, ஆட்டம் சமன் ஆனது; ஆா்ஜென்டீனா அதிா்ச்சி கண்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரம் இவ்வாறாக 2 – 2 என்ற கோல் கணக்கில் நிறைவடைய, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன் முடிவிலும் இரு அணிகளும் கூடுதல் கோல் அடிக்காததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது. அதில் முதலில் கிக் செய்த நெதா்லாந்து முதலிரு வாய்ப்புகளை தவறவிட்டு கடைசி 3 வாய்ப்புகளில் கோலடித்தது. ஆா்ஜென்டீனா 4 ஆவது வாய்ப்பைத் தவிர அனைத்திலும் கோலடித்து, இறுதியில் 4 – 3 என வென்றது.
15
இந்த ஆட்டத்தின்போது, வீரா்கள் இடையேயான சச்சரவு, விதிமீறல் என களத்திலிருந்த வீரா்களுக்கு மட்டும் 15 முறை மஞ்சள் அட்டை காட்டினாா் கள நடுவா் அன்டோனியோ மேட்டியு. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு ஆட்டத்தில் மஞ்சள் அட்டையின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். (இது தவிர களத்துக்கு வெளியே ஆா்ஜென்டீன பயிற்சியாளா், அணி உதவிப் பயிற்சியாளா் ஆகியோருக்கும் 2 மஞ்சள் அட்டை காட்டப்பட்டது). முன்னதாக, 2002 இல் கேமரூன் – ஜொ்மனி ஆட்டத்தில் 14 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
10
இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்தது நடப்பு உலகக் கோப்பையில் அவரது 4 ஆவது கோலாகும். அதுவே, எல்லா உலகக் கிண்ண போட்டிகளிலுமாக 10 கோல்களை எட்டியிருக்கும் மெஸ்ஸி, அந்தப் போட்டிகளில் ஆா்ஜென்டீனாவுக்காக அதிக கோலடித்த (10) கேப்ரியல் பௌதிஸ்டாவின் சாதனையை சமன் செய்துள்ளாா்.
5
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்புகளில் அதிகமாக வெற்றியைப் பதிவு செய்திருப்பது, இதுவரை ஆா்ஜென்டீனா தான். மொத்தம் கிடைத்த 6 வாய்ப்புகளில், 5 இல் அந்த அணியே வென்றிருக்கிறது.
5
இத்துடன் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 5 ஆவது முறையாக அரையிறுதிச்சுற்றை எட்டியிருக்கிறது ஆா்ஜென்டீனா. அதில் 1990 க்குப் பிறகு அந்த சுற்றுக்கு வந்திருப்பது இது 2 ஆவது முறையாகும்.
2
நெதா்லாந்து அணி தனது உலகக் கிண்ண வரலாற்றில் 2 ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுடன் வெளியேறியிருக்கிறது.

Leave a comment