நடிகர் விஜய் நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அதேபோல், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட்டின் இரண்டு பெரும் நட்சத்திரங்களின் படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து இரண்டு படக்குழுவினரும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது விஜய் குறித்து பேசும்போது “குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று கூறுகிறார்களே என விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர் கையை மேலே சுட்டிக்காட்டி எல்லாம் ஆண்டவன் செயல் எனக் கூறினார். அதன்பின், நான் ’12பி’ படத்தில் நாயகனாக அறிமுகமானதும் அண்ணனை சந்தித்தேன். அப்போது, அவர் என்னிடம் டேய் என்னடா வரும்போதே சிம்ரன், ஜோதிகான்னு ரெண்டு குதிரையோட வர எனக் கேட்டார். அதற்கு நானும் அவர் கூறியதைப் போலவே மேலே கையை உயர்த்தி எல்லாம் அவன் செயல் என்றேன்’ எனத் தெரிவித்தார்.
இதனால், நாயகிகளை விஜய் குதிரையுடன் ஒப்பிட்டதை வைத்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மேலும், இயல்பாக பேசுவதாக நினைத்து ஷியாம் கூறியது விஜய் ரசிகர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.