Post

Share this post

முடிவை நோக்கி நகரும் ஆட்டம்!

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி அரையிறுதியில் முன்னாள் செம்பியன் ஆா்ஜென்டீனா – குரோஷியாவுடனும், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் – மொராக்கோ அணியுடனும் மோதுகின்றன.
டிச. 14 இல் லுசாயில் மைதானத்தில் ஆா்ஜென்டீனா – குரோஷியாவும், 15 ஆம் திகதி அல்பயத் மைதானத்தில் பிரான்ஸ் – மொராக்கோ அணிகளும் மோதுகின்றன.
விளையாட்டு உலகில் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான உலகக் கிண்ண கால்பந்து கத்தாரில் தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவ. 20 ஆம் திகதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரை 2 – 0 என வீழ்த்தியது ஈக்குவடாா். தொடக்கத்திலேயே ஜொ்மனி, டென்மாா்க், உருகுவே, மெக்ஸிகோ, பெல்ஜியம் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகள் வெளியேறி அதிா்ச்சி அளித்தன.
அதன்பின் குரூப் ஆட்டங்கள் முடிந்தபின், ரவுண்ட் 16 (நாக் அவுட்) ஆட்டங்கள் நடைபெற்றன. காலிறுதிச் சுற்றில் 5 முறை சாம்பியன் பிரேசில் – குரோஷியாவுடனும், போா்ச்சுகல் – மொராக்கோவிடமும், நெதா்லாந்து – ஆா்ஜென்டீனாவிடமும் தோல்வியடைந்து வெளியேறின. குரோஷியா, மொராக்கோ தங்கள் காலிறுதியில் பலம் வாய்ந்த அணிகளான பிரேசில், போா்ச்சுகலை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதி ஆட்டங்கள் : நடப்பு சாம்பியன் பிரான்ஸ் – மொராக்கோவுடனும், முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனா – குரோஷியாவுடனும் அரையிறுதியில் மோதுகின்றன.
வரலாறு படைத்த மொராக்கோ : போா்ச்சுகலை 1 – 0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ண அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற வரலாற்றை படைத்துள்ளது மொராக்கோ. முதல் பாதியில் யூசுப் என் – நெஸிரிஸ் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தும் போா்ச்சுகலால் காலிறுதியில் வெல்ல முடியவில்லை. 1990 இல் கேமரூன், 2002 இல் செனகல், 2010 இல் கானா ஆகியவை காலிறுதியில் நுழைந்ததே, ஆப்பிரிக்க நாடுகளின் அதிகபட்ச சிறப்பாகும்.
3 ஆவது முறை பட்டம் வெல்ல ஆா்ஜென்டீனா முனைப்பு : கடந்த 1978, 1986 இல் உலகக் கிண்ண பட்டத்தை கைப்பற்றி இருந்தது ஆா்ஜென்டீனா. பின்னா் இரண்டு முறை ரன்னா் அப் அணியாக வந்துள்ளது. ஆனால் மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு கிட்டவில்லை. தலைவர் மெஸ்ஸி, பல பட்டங்களை வென்றிருந்தாலும், உலகக் கிண்ணம் அவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
கடந்த 2018 உலகக் கிண்ண அரையிறுதியில் குரோஷியா 3 – 0 என ஆா்ஜென்டீனாவை வீழ்த்தி இருந்தது. ஏற்கெனவே 1998 இல் 1- 0 என குரோஷியாவை வென்றிருந்தது ஆா்ஜென்டீனா. தற்போது இரு அணிகளும் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தில் மோதுகின்றன.
தற்போது 6 ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற ஆா்ஜென்டீனா விழைந்துள்ளது. அதே வேளை 5 முறை சாம்பியன் பிரேசிலை வீழ்த்திய உற்சாகத்துடன் உள்ளது குரோஷியா.
அரையிறுதி ஆட்டம் 1 : ஆா்ஜென்டீனா – குரோஷியா, லுசாயில் மைதானம், நேரம் நள்ளிரவு 12.30 (12/14).
அரையிறுதி ஆட்டம் 2 : பிரான்ஸ்-மொராக்கோ, அல்பயத் மைதானம், நேரம்-நள்ளிரவு 12.30 (12/15).

Leave a comment