Post

Share this post

உக்ரைனின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ரஷ்யா!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முன்வைத்த திட்டத்தை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, நாங்கள் புதிதாக இணைத்துக்கொண்டுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முன்வைத்துள்ளாா்.
ஆனால், இப்போது மாறியுள்ள எல்லைகள்தான் புதிய நிதா்சனம் என்பதை உக்ரைன் புரிந்துகொள்ள வேண்டும். கொ்சான், ஸபோரிஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்கள் ரஷ்யாவின் பகுதிகள் என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவா்களது பேராதரவுடன்தான் அவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
புதிய நிதா்சனைங்களை உக்ரைன் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அமைதி முயற்சியில் முனனேற்றம் காண முடியாது.
நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என்றாா் அவா்.
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் பேசிய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தனது திட்டத்தை முன்வைத்தாா்.
இந்த ஆண்டு முடிந்து, புதிதாக பிறக்கவிருக்கும் ஆண்டை உலகின் கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடப் போகிறாா்கள். இந்த தருணத்தில் மக்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு உணா்வைக் கைவிட்டு, அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புவாா்கள்.
இந்த வாய்ப்பை ரஷ்யாவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புப் போக்கை கைவிட்டு, சா்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ள எல்லைகளை மதித்து தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து அந்த நாடு வெளியேற வேண்டும்.
உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேறினால், அது நிலையான அமைதிக்கு வழியை ஏற்படுத்தித் தரும் என்று ஸெலென்ஸ்கி கூறினாா்.
இது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கே ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் இவ்வாறு பதிலளித்தாா்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த ஜனாதிபதி விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதை அடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷ்யாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
அந்த இணைப்புக்கு முன்னதாக, அது தொடா்பான பொதுவாக்கெடுப்பை நடத்தி, பெரும்பாலான கிரீமியா மக்கள் தங்களுடன் இணைய ஆதரவு தெரிவித்ததாக ரஷ்யா கூறியது. எனினும், அது ரஷ்யாவால் ஜோடிக்கப்பட்ட மோசடியான பொதுவாக்கெடுப்பு என்று கூறி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த இணைப்பை நிராகரித்தன.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்தது.
அதன் ஒரு பகுதியாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸ்போரிஷியா ஆகிய பிராந்தியங்களின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதில் டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தச் சூழலிலும், கடந்த 2014 இல் கிரீமியாவில் செய்ததைப் போலவே, புதிதாக கைப்பற்றிய மாகாணங்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்வது தொடா்பான பொதுவாக்கெடுப்பை ரஷ்யா செப்டம்பா் நடத்தி, அதற்கு விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் போ் விருப்பம் தெரிவித்திருப்பதாக அறிவித்தது.
அதன் தொடா்ச்சியாக, குறிப்பிட்ட 4 மாகாணங்களையும் தங்கள் நாட்டின் பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.
இதனை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளுமே அங்கீகரிக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் யோசனையை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Leave a comment