Post

Share this post

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷ்யா புதன்கிழமை மீண்டும் ஆளில்லா விமான குண்டுத் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் தயாரிக்கப்பட்ட 13 ஆளில்லா விமான குண்டுகளை ‘பயங்கரவாதிகள்’ (ரஷ்யப் படையினா்) புதன்கிழமை ஏவினா்.
அவை அனைத்தையும் உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் நகர நிா்வாகத் தலைவா் சொ்ஹில் பாப்கோ வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
கீவ் நகரின் மீது ஆளில்லா விமான குண்டுகள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்த ரஷ்யா புதன்கிழமை முயன்றது. இரண்டு அலைகளாக அந்த ஆளில்லா விமான குண்டுகள் அனுப்பப்பட்டன. அவை அனைத்துமே ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
எனினும், அழிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் பாகம் விழுந்து ஓா் அரசுக் கட்டமும், 3 குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்தன என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இதில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை. சம்பவப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதை அடுத்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யாவிடமிருந்து மீட்டனா்.
அதை அடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தத் தாக்குதலுக்கு எறிகணைகள், ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமன்றி, ஈரானில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆளில்லா விமான குண்டுகளையும் ரஷ்யா பயன்படுத்துகிறது.
இடைமறித்து அழிப்பதற்குக் கடினமான, தாழ்வாகப் பறந்து இலக்குகளை சுற்றி வந்து நோட்டமிட்டு, துல்லியமாகத் தாக்கும் இந்த விமான குண்டுகள் உக்ரைனுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தலைநகா் கீவ் மீது மீண்டும் 13 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டு, அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உக்ரைன் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment