கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக பிரபல வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
கட்டாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4 – 2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3 – 3 என சமநிலையில் இருந்தன.
1978, 1986 க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3 வது உலகக் கிண்ணம் இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962 க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கிண்ணத்தை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது.
இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2 வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.
இதுவே என்னுடைய கடைசி உலகக் கிண்ண போட்டி எனச் சில நாள்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார் மெஸ்ஸி. இதனால் உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் சில வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உலகக் கிண்ணத்தை தவிர எல்லாப் போட்டிகளையும் வென்றது என் அதிர்ஷ்டம். இந்த உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனாவுக்கு எடுத்துச் சென்று அனைவர் முன்னிலையிலும் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் போகிறேன் என்றார்.