Post

Share this post

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் தாமதப்படுத்தாமல் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,தம்மிடம் முன்வைக்கப்படும் 50 சதவீத மக்களின் பிரச்சினைகளை அரச அதிகாரிகளினால் தீர்க்க முடியும்.
அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர் ஒருவர் கொழும்பில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை.
அரச நிறுவனங்கள் அதனை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நன்கு ஒருங்கிணைந்த முறையில் மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட மக்களின் காணி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். மாவட்ட செயலகம், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணி பதிவு திணைக்களம் இணைந்து இம்மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி தொடர்பில் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் இந்த செயற்பாடுகளை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அவ்வாறு உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தோட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ள சுகாதார நிலையங்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்பட்டது.
“அரசு அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இம்மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளுடன் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.
ஒரு ஜனாதிபதி என்ற முறையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைத் தவிர வேறு எந்தப் பணியையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்காது,” என கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் என்ற முறையில், எந்த ஒரு விஷயத்திலும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. மக்களுக்கும் சுற்றாடலுக்கும் தீங்கு விளைவிக்கும் எதனையும் அரச அதிகாரிகள் செய்யக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், உலக முடிவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பொல மற்றும் பொரலந்தவிற்கு இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் இன்று விவாதிக்கப்படும் 50 சதவீத பிரச்சினைகள் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள். இருப்பினும், பொது அதிகாரிகளாக நீங்கள் உக்ரைனும் ரஷ்யாவும் போரில் இருப்பது போல் செயல்படுகிறீர்கள்.
ஒரு ஜனாதிபதியோ, அமைச்சரோ கூட பணத்தை செலவழித்து கொழும்பில் இருந்து வந்து இந்த சின்ன சின்ன விடயங்களை பேச வேண்டிய அவசியமில்லை.
எனவே, அரசு அதிகாரிகள் இழுபறியில் ஈடுபடாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவது அவசியம்,” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வி.ராதாகிருஷ்ணன், உதய குமார், எம்.ராமேஸ்வரன், நிமல் பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க, மத்திய அமைச்சர் நவின் திசாநாயக்க உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Leave a comment