நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களது பாஸ்வேர்டை பரிமாறிக் கொள்ளும் வசதியை 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இழக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டு இறுதியிலேயே, பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் வசதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுத்திவிடும் என்று தகவல்கள் வெளியான நிலையில், அந்த நடவடிக்கை 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கூறுகையில், பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் முறையால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவது உண்மைதான். ஆனால் அதனை தடை செய்வது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுவே.
அதேவேளையில், நிறுவனத்தின் வருவாய் வெகுவாகக் குறைந்திருப்பதால், அந்த முடிவை விரைவாக எடுக்க நிர்வாகத் தலைமை விரும்புகிறது. ஒரு நெட்ஃபிளிக்ஸ் கணக்கு இருந்தால், அதனை ஐந்து பேர் பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது உள்ளது.
முதற்கட்டமாக சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் இந்த பாஸ்வோர்டு பகிர்வுக்குத் தடை விதிக்கப்பட்டு, அவ்வாறு பகிரும் பயனாளர்களுக்கு ரூ.250 வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதற்காக. ஐ.பி. முகவரி, சோதனை ஐ.டி., கணக்கு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களையும் நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது.