Post

Share this post

பிரபல நடிகை உடற்கூராய்வு அறிக்கை இதோ…

பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மாவின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
சல்மான் கானுடன் தபாங் 3, கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் துனிஷா சர்மா (20). இவர் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சக நடிகர் ஷீசன் முகமது கானை அவர்கள் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரை மும்பை வசாய் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது கானை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் சந்திரகாந்த் ஜாதவ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, துனிஷா சர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகையாக பணியாற்றி வந்தார். துனிஷா சர்மாவுக்கும், ஷீசன் கானுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பிறகு துனிஷா தனது நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
துனிஷாவின் தாயார் புகார் அளித்ததையடுத்து, ஷீசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கையில் தூனிஷா தூக்கு மாட்டி இறந்ததற்கான காரணம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஷீசன் மற்றும் துனிஷாவின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். அதேசமயம் சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீஸாரால் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிஷாவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் நைகானில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு அவரது உடற்கூராய்வு செய்யப்பட்டது. மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை படப்பிடிப்பு தளத்தில் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment