அமெரிக்காவில் வீசி வரும் பனிப் புயலுக்கு இதுவரை 47 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குளிா் காலத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் வடக்கு சமவெளிப் பகுதியில் கடந்த புதன்கிழமை உருவான பனிப் புயல், நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
இது, தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படக் கூடிய மிக மோசமான பனிப்புயல் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்தப் பனிப் புயல் காரணமாக, கடுமையான குளிா், மின்தடை, போக்குவரத்து இடயூறு போன்றவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பஃபல்லோ உள்ளிட்ட நகரங்கள் பனியால் மூடப்பட்ட நிலையில், அங்கு மேலும் 14 அங்குலம் வரையிலான உயரத்துக்கு பனி உறையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
மோசமான வானிலை காரணமாக, வடக்கு அமெரிக்காவில் இதுவரை 17,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்த கடுமையான பனிப் புயலால் அமெரிக்கா மட்டுமின்றி கனடா உள்ளிட்ட நாடுகளும் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.