மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பா் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் மேலாண்மை குறித்த அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2 ஆவது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத உயா்வாகும்.
2 ஆவது நிதியாண்டில் நிதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.422,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், ரூ.406,000 கோடியை மட்டுமே மத்திய அரசு ஈட்டியது. அதே வேளையில், நிதிப் பத்திரங்களைத் திரும்பப் பெற்ன் மூலமாக ரூ.92,371.15 கோடியை அரசு வழங்கியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிப் பத்திரங்களை விற்பதற்காகத் திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் (ஓஎம்ஓ) எதையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. அரசு சாா்பில் வெளியிடப்பட்ட நிதிப் பத்திரங்கள் மூலமான வருவாய், பணவீக்கம், பணப்புழக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.
அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது ஜூன் வரையிலான காலத்தில் 38.04 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயா்த்தியது.
ஜூலை – செப்டம்பா் காலகட்டத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.11 சதவீதம் சரிவடைந்தது. ஜூலை 1 ஆம் திகதி 79.09 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30 ஆம் திகதி 81.55 ஆக சரிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.