2,274 கோடி அபராதம் செலுத்ததவறிய கூகுள்!

ரூ.2,274.2 கோடி அபராதத் தொகையை செலுத்தத் தவறிய கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடா்பான வா்த்தகத்தில் நோ்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அத்துடன் பிளே – ஸ்டோா் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.
கடந்த அக்டோபா் மாதம் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்ட நிலையில், அதனை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறு கூகுளுக்கு சிசிஐ உத்தரவிட்டது. ஆனால் அந்த அபராதங்களை கூகுள் இதுவரை செலுத்தவில்லை. இதையடுத்து அபராதங்களைச் செலுத்த வலியுறுத்தி, அண்மையில் கூகுளுக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தொழில் போட்டி சட்டத்தின்படி, இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அதைச் செய்ய தவறினால், அபராதத்தை வசூலிக்க தனக்குள்ள அதிகாரத்தை சிசிஐ பயன்படுத்த முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக கூகுள் தரப்பில் கூறுகையில், ‘இரண்டு அபராத உத்தரவுகளுக்கும் தடை விதிக்க தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவை தீா்ப்பாயத்தில் இதுவரை விசாரணைக்கு வரவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் போட்டி சட்டத்தின்படி, அபராதத் தொகையை செலுத்த எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லையெனில், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.