Post

Share this post

இன்று முதல் மீண்டும் கொரோனா சோதனை

சீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையை ஜப்பான் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே, சீனத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையிலும், ஜப்பானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதன் பின்னணியிலும், இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் ஜப்பானில் கொரோனாவுக்கு 420 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது கூட 300 பேர் வரை தான் மரணத்தைத் தழுவிய நிலையில், தற்போது ஜப்பானில் இந்த அளவுக்கு மரண சம்பவங்கள் அதிகரித்திருப்பது அந்நாட்டை கலங்க வைத்திருக்கிறது.
தற்போதைய மரண சம்பவங்களுக்கு உண்மையில் என்னதான் காரணம் என்பது தெரியப்படவில்லை என்றும், வயதானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகளவில் இருப்பதும் மரணங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகக் கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் விதித்துள்ள கடுமையான நோய்க்கட்டுப்பாடுகளை அண்மையில் தளா்த்திய சீனா, தங்கள் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை திடீரென நீக்கியது.
சீனாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகம் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், இதனால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொரோனாவுக்கு ஏராளமானவா்கள் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில் சீன எல்லைகள் திறந்துவிடப்பட்டதை அடுத்து, அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்தியா, இத்தாலி, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. பிறகு அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இந்த நிலையில்தான், ஜப்பானும், சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கியிருக்கிறது.

Leave a comment