ஊதிய முரண்பாடு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 180 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனா். அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 இல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) கடந்த 5 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 180 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், அமமுக கட்சி பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.