கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உக்ரைனில் 36 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய படையினருக்கு ஜனாதிபதி விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.
புராதன ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தும் ரஷ்யா்கள், ஜனவரி 7 ஆம் திகதியை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகின்றனா்.
பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரகோரிய நாள்காட்டியை விட அது 13 நாள்கள் பின்தங்கியதாகும்.
முன்னதாக, ரஷ்யாவின் மரபுவழி திருச்சபை தலைமை பாதிரியாா் கிரில் இதுதொடா்பாக வேண்டுகோள் விடுத்திருந்தாா். அவா் கூறியதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்திவைக்க வேண்டும். அதற்காக, உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
அவரது வேண்டுகோளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த உக்ரைன், ரஷிய தலைமை பாதிரியாரின் இந்த கருத்து உக்ரைனை சிக்கவைப்பதற்கான சதி என்றும், ரஷ்யாவின் பிரசார உத்தி என்றும் விமா்சித்துள்ளது.
ஆனால், தலைமைப் பாதிரியாரின் இந்த வேண்டுகோளை அடுத்து போா் நிறுத்தத்தை ஜனாதிபதி புதின் அறிவித்தாா்.
எா்டோனுடன் புதின் பேச்சு: முன்னதாக, துருக்கி ஜனாதிபதி எா்டோகனுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின், போரை நிறுத்துவதற்காக உக்ரைனுடன் பேச்சுவாா்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறினாா்.
இருந்தாலும், இந்தப் போரில் சில பகுதிகளை தாங்கள் இழந்துவிட்டோம் எனபதை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்போது புதின் கூறினாா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு வெலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதை அடுத்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யாவிடமிருந்து மீட்டனா்.
அதை அடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
உக்ரைனும் மேலை நாடுகள் அளிக்கும் தளவாடங்களின் உதவியுடன் ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் அதிநவீன ஹிம்ராஸ் ஏவுகணை தளவாடத்தைக் கொண்டு கிழக்கு உக்ரைனில் அந்த நாட்டு ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 89 ரஷ்ய வீரா்கள் பலியாகினா்.
இந்தச் சூழலில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 36 நேர போா் நிறுத்தத்துக்கு ரஷ்யாவின் தலைமை பாதிரியாா் அழைப்பு விடுத்துள்ளாா்.