அசுத்தமான உணவு குறித்து பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். அவர் இயக்கிய மலையாள படமான ‘பிரேமம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் அவர் இயக்கத்தில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், கேரளத்தில் உணவகம் ஒன்றில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 20 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் செவிலியர் ஒருவர் பலியானார்.
இதைக் குறிப்பிட்ட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் ‘15 ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஷராஃப் உதீன் ஷவர்மா வாங்கிக்கொடுத்தார். மயோனைஸ் உடன் அதை உண்டேன். அடுத்த நாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட ரூ.70,000 செலவு செய்து என் பெற்றோர் என்னைக் காப்பாற்றினார்கள். இதற்காக நண்பர் மீது கோவப்பட்டேன். ஆனால், கெட்டுப்போன அசுத்தமான உணவுதான் என் நிலைமைக்குக் காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார்? கண்களைத் திறந்து உண்மையைப் பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது.” எனத் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.