Post

Share this post

2 குழுக்களுக்குத் தடை – 4 போ் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

கடந்த ஒரு வாரத்துக்குள் 2 பயங்கரவாதக் குழுக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதோடு 4 பேரை பயங்கரவாதிகளாகவும் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தின்போது ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நான்கு நாள்களுக்குள் இரு பயங்கரவாதக் குழுக்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. அவ்விரு குழுக்களும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்-காய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த காஷ்மீரைச் சோ்ந்த ஐசாஸ் அகமது என்ற அபு உஸ்மான் அல்-காஷ்மீரியை பயங்கரவாதி என கடந்த 4 ஆம் திகதி அமைச்சகம் அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக ஆள்சோ்ப்பு நடவடிக்கையில் அபு உஸ்மான் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற பயங்கரவாதக் குழு கடந்த 5 ஆம் திகதி அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. அந்தக் குழு இணையவழியில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவவும் அக்குழு உதவியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த முகமது அமீன் என்ற அபு குபாயப் கடந்த 5 ஆம் திகதி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாா். ஜம்முவில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிஏஎஃப்எஃப் குழு மீது கடந்த 6 ஆம் திகதி தடை விதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரா்களைத் தாக்கியது, அரசியல் தலைவா்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அக்குழு மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரைச் சோ்ந்த அா்பாஸ் அகமது மீா் என்ற நபா் பயங்கரவாதியாக கடந்த 6 ஆம் திகதி இரவு அறிவிக்கப்பட்டாா். சவூதி அரேபியாவில் வசித்து வரும் ஆசிஃப் மக்பூல் தாா் என்ற நபரையும் கடந்த 7 ஆம் திகதி பயங்கரவாதியாக அமைச்சகம் அறிவித்தது. சமூக வலைதளங்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Leave a comment