Post

Share this post

100 அடிக்கும் கீழே ரயில் நிலையம்!

´´சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தாலும், அதை உருவாக்கும் காலகட்டத்திலும் மக்களுக்கு சில அசெளகரியங்கள் ஏற்படலாம். அது தற்காலிகமானது தான். திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டதும், அதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள். பயன்களை அனுபவித்து மகிழ்ச்சி அடைவார்கள்´´ என்கிறார் அதன் திட்ட இயக்குநர் அர்ஜுனன்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன?
சென்னை மாநகரமே கடந்த சில ஆண்டுகளாகக் கூடுதல் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கிறது. சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமல்ல; பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருப்பதும் ஒரு காரணம். இருப்புப் பாதை அடிப்படையிலான விரைவான போக்குவரத்து திட்டம் ஒன்றின் தேவையை உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாநகரப் போக்குவரத்துக் கழகம், தனியார் போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை, துரித போக்குவரத்து ரயில் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து, விரைவான, வசதியான, நம்பிக்கைக்கு உகந்த, செயல்திட்பமுடைய, அதிநவீனமான போக்குவரத்து திட்டம்தான் இது. மெட்ரோ ரயில் திட்டம் எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்கும். கொல்கத்தா, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக, பூமிக்கடியில் சுரங்கப் பாதையைத் தோண்டி, ரயில் பாதைகள் அமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து?
பூமிக்க்குள்ளே எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருக்காதல்லவா? மும்பையில் களிமண் நில அமைப்பு. பெங்களூரில் நிலத்தடியில் பாறைகள்அதிகம். சென்னையில் களிமண்ணும், பாறைகளும் சேர்ந்திருப்பதால், மிகவும் சவாலானது.
இரண்டு தடங்களில் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
முதல் கட்டத்தில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும் (நீல வழித் தடம்) , பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் (பச்சை வழித் தடம்) என்று இரண்டு வழித் தடங்களின் நீளம் 55 கி. மீ. ஆகும். அவற்றில் தினமும் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் சராசரியாகத் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். அது நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டேவந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 56.66 லட்சம் பேர் பயணித்துள்ளனர். செப்டம்பரில் 61.13 லட்சமாகவும், அக்டோபரில் 61.56 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் 21 ஆம் திகதி மட்டும் மிக அதிகபட்சமாக 2.66 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது ஒரு சாதனைதான்.
இரண்டாவது திட்டப் பணி பெரியது அல்லவா?
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட மதிப்பீடு ரூ.63, 250 கோடியாகும். மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான தடம் 45.8 கி.மீ. , கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான தடம் 26.1 கி.மீ., மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தடம் 47 கி.மீ. என 118.9 கி. மீ. தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதில், 76.3 கி.மீ. தூரம் தூண்கள் மீதான மெட்ரோ ரயில் பாதைஅமையும். மீதமுள்ள 42.6 கி.மீ. பூமிக்கு அடியில் சுரங்க ரயில் பாதையாக அமையும்.
இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?
மாநகரத்தின் 128 பகுதிகளை இணைக்கும். கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் கடலுக்கு வெகு அருகில் அமையும். இதுபோல வேறு எங்கும் இல்லை எனலாம்.
திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் புவிக்குள்ளே 110 அடி ஆழத்தில் அமையவிருக்கிறது.
பூமிக்கு அடியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளத் தடுப்புக்காகத் தானியங்கிக் கதவுகள் அமைக்கப்படும். கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமையும் தடத்தில் கடல்அரிப்பைத் தடுக்கவும் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.
சுரங்க ரயில்பாதை அமைப்பதில் உள்ளசவால்கள் என்ன?
சுரங்கப் பாதை அமைப்பதற்கு சீனாவிலிருந்து மேம்பட்ட தொழில்நுட்ப இயந்திரங்களை வரவழைத்துப் பயன்படுத்துகிறோம். இவ்வாறாக, 23 இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.
6.6 மீ. விட்டம் கொண்ட சுரங்கம் தோண்ட முடியும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 10 மீ. முதல் 12 மீ. தூரத்துக்கு சுரங்கம் தோண்டலாம்.
புவிக்குள்ளேஆழமாகப் போகப் போகஆபத்துகள் அதிகம். வெப்பம் அதிகரிக்கும். அபாயகரமான வாயு இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியும்.
எனவே, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை காற்று பரிசோதிக்கப்பட்டு, விஷ வாயுக்கள் ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பணி தொடர்கிறது. பாதுகாப்பு கருதி, ஆக்சிஜனும் செலுத்தப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு மூச்சடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுமானால், உடனே அவசர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப் போறீர்களாமே?
ஆமாம்! இரண்டாம் கட்டப் பணிகள்நிறைவின்போது, ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான சிக்னல், ரயில் இயக்கக் கட்டுப்பாடு காணொளி- மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு நிறைந்த அதிநவீன தொழில்நுட்பம் அவசியமாகிறது.
இந்தப் பணி ரூ. 1,620 கோடி மதிப்பில்மேற்கொள்ளப்படும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதிக்குப் பின்னர் செயல்படுத்தப்படும்.
வேறு என்ன புதுமைக்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
பயண அட்டை, க்யூ.ஆர். கோடு, வாட்ஸ் ஆஃப், ஜி. பே., யு.பே. உள்ளிட்டவற்றில் பயணச் சீட்டு எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
சிறப்புகள் என்ன?
சென்னையின் பிரதான போக்குவரத்து முனையங்களான விமான நிலையம், பிராட்வே, கோயம்பேடு பேருந்து நிலையங்கள், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை மெட்ரோ ரயில் தடங்களால் இணைக்கப்பட்டுள்ளன.
முக்கிய மருத்துவமனைகள், உயர்நீதிமன்றம், பன்னாட்டுத் தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், முக்கிய வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை எளிதில் சென்றடைய வசதி.
மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளோடு ஒப்பிடுகையில், மெட்ரோ ரயிலில் மிகக் குறைந்த கார்பன் புகை வெளியேற்றம்.
காற்று மாசுபடுவதில்லை.
அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.
உயர்ந்த தொழில்நுட்பம்.
குறைந்த அளவே மின்சாரம், எரிபொருள், ஒலி, சாலையில் வாகன நெரிசல் குறைவு.
விபத்துகள் குறைய வாய்ப்பு.

Recent Posts

Leave a comment