மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26 இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இத்தகவலை, தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் தலைவரும் மேலாண் இயக்குநருமான கிருஷ்ணா எல்லா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற இந்திய – சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற அவா், மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
அப்போது, ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, குடியரசு தினமான ஜனவரி 26 இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோய்க்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘லம்பி-புரோவாக் இண்ட்’ தடுப்பூசி, அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று கிருஷ்ணா எல்லா குறிப்பிட்டாா்.
முன்னதாக, ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்து, மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்றும், ஜனவரி 4 ஆவது வாரத்தில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.