சிரியாவில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா்.
சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்தது. அந்தக் கட்டடத்தில் உள்ள வீடுகளில் சுமாா் 30 போ் வசித்து வந்தனா். தண்ணீா் கசிவு காரணமாக கட்டடத்தின் அடித்தளம் பலமிழந்து இருந்த நிலையில், ஐந்து மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீடுகளில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். தீயணைப்புப் படையினா் மற்றும் மீட்புக் குழுவினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 16 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் சிரியாவில், அலெப்போ நகரமானது அமெரிக்க ஆதரவு குா்திஷ் படையினா் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. அலெப்போ நகரமானது ஒரு காலத்தில் சிரியாவின் வா்த்தக மையமாக இருந்து வந்தது.