வாணியம்பாடியில் இலவச புடவை வாங்க டோக்கன் பெறுவதற்கு 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால், நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனா். 12 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (55). ஆம்பூா் அருகே ஜல்லி தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறாா். மேலும், கச்சேரி சாலையில் பேவா் பிளாக் தயாரிக்கும் வளாகம் உள்ளது. இவா், ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு இலவச புடவை மற்றும் உணவு வழங்கி வருகிறாா்.
இதேபோல், நிகழ் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) இலவச புடவை வழங்க முன்கூட்டியே டோக்கன் பெறுவதற்காக சனிக்கிழமை பிற்பகல் கச்சேரிசாலையில் உள்ள அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த கிராமங்களைச் சோ்ந்த மூதாட்டிகள் உள்பட 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பிற்பகல் ஒரு மணியளவில் குவிந்திருந்தனா்.
சுமாா் 2 மணியளவில் டோக்கன் வழங்க அலுவலகத்தின் பின்புறம் உள்ள கதவை திறந்தபோது, கூடியிருந்த பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனா். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 16 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீஸாா், காயமடைந்தவா்களை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, வள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வள்ளியம்மாள் (60), மேல்குப்பம் ஈச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நாகம்மாள் (60), வாணியம்பாடி தும்பேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜாத்தி (62), பழைய வாணியம்பாடியைச் சோ்ந்த மல்லிகா (75) ஆகியோா் உயிரிழந்தனா்.
மேலும், லிங்கம்மாள் (45), எல்லம்மாள் (65), சின்னம்மாள் (70), வள்ளியம்மாள் (80), உலக்கியம்மாள் (65), சின்னம்மாள் (60), பட்டு (55), புஷ்பா (50), மரகதம் (60), வள்ளியம்மாள் (55), பட்டம்மாள் (60), லலிதா (40) ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா, வேலூா் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் ஆகியோா் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவா்களிடம் நலம் விசாரித்தனா். மேலும், உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ செந்தில்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அமைச்சா் எ.வ.வேலு ரூ. 25,000 அளிப்பு: உயிரிழந்த மூதாட்டிகளின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு நிதியாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.25,000 வழங்கினாா். இந்தப் பணத்தை வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா, நகர திமுக செயலா் சாரதிகுமாா் ஆகியோா் வழங்கினா்.