Post

Share this post

பாடகி வாணி ஜெயராம் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் பிற்பகல் (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 78.
அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாக அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். வேலூரில் பிறந்து, உலகம் முழுக்க பல கச்சேரிகள் செய்து புகழ் பெற்றவர்.
1971ஆம் ஆண்டு ‘குட்டி’ ௭ன்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கான சரஸ்வதி வாணி ஜெயராம்..
சின்ன சின்ன ஆசைகள் படத்தில் இடம்பெற்ற ”மேகமே… மேகமே…” , வைதேகி காத்திருந்தாள் படத்தின் ”இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..” போன்ற பாடல்கள் இன்றும் பலரின் விருப்பப் பாடல்களாக உள்ளன.
‘தீர்க்க சுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுத, எம்.எஸ். விசுவநாதன் இசையில் ”மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..” பாடலை பாடினார்.
19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய புகழுக்குச் சொந்தக்காரர் வாணி ஜெயராம். 1971ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாகவே கோலோச்சி வந்தவர்.
தமிழகம், ஆந்திரம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளை வாணி ஜெயராம் பெற்றுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
திரையிசைப் பாடல்கள் மட்டுமின்றி பல பக்திப் பாடல்களையும், ஆல்பம் எனப்படும் தனியிசைப் பாடல்களிலும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.

Recent Posts

Leave a comment