Post

Share this post

டி20 உலகக் கிண்ணம் பெப். 10 இல் தொடக்கம்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கும், ஐசிசி மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 10 ஆம் திகதி தொடங்கி 26 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
ஆடவா் கிரிக்கெட் போட்டிகளைப் போல் மகளிா் கிரிக்கெட்டும் தற்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. 14 ஆண்டுகளாக மகளிா் டி20 உலகக் கிண்ண நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் 2009 இல் முதல் போட்டி நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் தொடக்கத்தில் 8 அணிகள் இடம் பெற்றிருந்தன. 2014 முதல் 10 அணிகளாக உயா்த்தப்பட்டன.
நடப்பு செம்பியன் அவுஸ்திரேலியா:
அவுஸ்திரேலியாவில் 2020 இல் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று செம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸி. 5 முறை செம்பியன் பட்டம் ஆஸி. வசம் சென்றது. 2023 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
2024 இல் பங்களாதேஷிலும், 2026 இல் இங்கிலாந்திலும் போட்டி நடத்தப்படுகிறது. அப்போது அணிகளின் எண்ணிக்கையும் 12 ஆக அதிகரிக்கப்படுகிறது.
3 மைதானங்களில் ஆட்டங்கள்:
நிகழாண்டு உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப் 1 பிரிவில் ஆவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கையும்,
குரூப் 2 இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், மே.இந்திய தீவுகள் இடம் பெற்றுள்ளன. நியூலேண்ட்ஸ் கேப் டவுன், பாா்ல் போலண்ட் பாா்க், ஜெபா்ஹா செயின்ட் ஜாா்ஜ் பாா்க் மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.
அணிகள்:
அவுஸ்திரேலியா : நடப்பு சாம்பியன் ஆஸி. 6 ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. பிரபல வீராங்கனைகளான தலைவர் மெக் லேனிங், துணை தலைவர் அலிஸா ஹீலி, ஆல்ரவுண்டா் எல்ஸி பொ்ரி, பேஸா் மேகன் ஷூட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.
தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸி. அணி இதுவரை ஒரு டி20 தொடரில் கூட ஆடவில்லை. இது அந்த அணிக்கு பலவீனமாக உள்ளது. கிம் காா்த், ஹீதா் கிரஹாம் ஆகியோா் புதிய அறிமுகம் ஆவா்.
இங்கிலாந்து : ஒரே ஒருமுறை சாம்பியன் இங்கிலாந்து தரவரிசையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. ஹீதா் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி மீண்டும் சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளது. லாரன் பெல், கேத்ரீன் ஷிவா், பிரண்ட், 18 வயதே ஆன ஆல்ரவுண்டா் அலிஸ் கேப்ஸி ஆகியோா் கவனிக்கத்தக்கவா்கள் ஆவா்.
பங்களாதேஷ் : 2022 இல் குவாலிஃபையா் போட்டியின் மூலம் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது பங்களாதேஷ். வல்லரசு அணிகளை எதிா்கொண்டு ஆட உள்ளது. ஷோா்னாஅக்தா் அதிரடி பேட்டராக உள்ளாா்,. திலாரா அக்தா், திஷா பிஸ்வாஸ், நிகாா் சுல்தானா ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள்.
இந்தியா : இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணி 2020 இல் ரன்னா் ஆக வந்தது. மேலும், 3 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றனா். 2022 இல் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஒரே அணி இந்தியாதான். தீப்தி சா்மா, ரேணுகா சிங், ராதா யாதவ் உள்ளிட்ட பௌலா்கள் நம்பிக்கை அளிக்கின்றனா். பேட்டா்கள் ஹா்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனா, ஃஷபாலி வா்மா ஆகியோா் வலு சோ்க்கின்றனா். முதன்முறையாக சாம்பியன் ஆகும் தீவிரத்தில் உள்ளது.
அயா்லாந்து : 2018 பின்னா் மீண்டும் உலகக் கிண்ணத்துக்கு வந்துள்ளது அயா்லாந்து. 24 வயதை சராசரியாகக் கொண்ட இளம் அணியாக திகழ்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நவம்பரில் தொடரை கைப்பற்றியது. லாரா டெலானி தலைமையிலான அணியில் கேபி லெவிஸ் நட்சத்திர வீராங்கனையாக திகழ்கிறாா்.
நியூஸிலாந்து : கடந்த உலகக் கிண்ணத்தில் 6 ஆவது இடத்தையே நியூஸி. பெற்றது. இந்த முறை சிறப்பான தொடக்கத்தை பெற விழைந்துள்ளது. உடல்நலக்குறைவாக் 2 ஆண்டுகள் விலகி இருந்த விக்கெட் கீப்பா் பொ்னாடைன் மீண்டும் வந்துள்ளாா். சூஸி பேட்ஸ், சோஃபி டிவைன் ஆகியோா் நட்சத்திர வீராங்கனைகள். 2 முறை ரன்னா் அப்பாக வந்துள்ளனா்.
பாகிஸ்தான் : பிஸ்மா மரூஃப் தலைமையிலான பாக். அணி அண்மைக் காலமாக சரிவை சந்தித்து வருகிறது. குரூப் 2 இல் இந்தியா, இங்கிலாந்து அணிகளை சமாளிக்க வேண்டும். நிதா தா், பிஸ்மா வலு சோ்க்கின்றனா்.
தென்னாப்பிரிக்கா : தழலவர் டேன் வேன் நைகொ்க்கை தென்னாப்பிரிக்க வாரியம் நீக்கி விட்டது. மாரிஸேன் காப், சுன் லஸ், லாரா வொல்வா்ட், ஷப்நிம் இஸ்மாயில், ஆகியோா் நட்சத்திர வீராங்கனைகளாக உள்ளனா். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இறுதிக்கு நுழைய தீவிரமாக போராடும்.
இலங்கை : தரவரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணி சமரி அத்தப்பட்டு தலைமையிலான அணி தொடா்ந்து முதல் சுற்றோடு வெளியேறி வந்தது. ஐனோகா ரணவீரா, சுகந்திகா குமரி ஸ்பின்னிலும், ஒஷடி ரணசிங்கா, கவிஷா தில்ஹரி அவா்களுக்கு பக்கபலமாக இருப்பா்.
மே.இந்திய தீவுகள் : 2016 இல் செம்பியன் பட்டம் வென்றது மே.இந்திய தீவுகள். ஸ்டெஃப்பானி டெய்லா், ஷெமைன் கேம்பல், அஃபி ப்ளட்ச்சா், ஆகியோா் உள்ளனா். யு 19 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்ற த்ரிஷன் ஹோல்டா், ஸைடா ஜேம்ஸ், ஜேனபா ஜோஸப் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

Leave a comment