Post

Share this post

தாடி வளா்ப்பதால் பிரதமராகிவிட முடியாது!

தாடி வளா்ப்பதால் மட்டுமே ஒருவா் பிரதமா் பதவிக்கு வந்துவிட முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாஜகவைச் சோ்ந்த மகாராஷ்டிர மாநில அமைச்சா் சுதீா் முங்கன்திவாா் விமா்சித்துள்ளாா்.
இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் போது ராகுல் காந்தி சவரம் செய்யாமல் தாடியை வளா்க்கத் தொடங்கினாா். அதே தோற்றத்தில் இப்போது நாடாளுமன்றத்துக்கும் ராகுல் வருகை தருகிறாா். இதனையே, சுதீா் முங்கன்திவாா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகுதான் அதானியின் வளா்ச்சி பிரம்மாண்டமாக வளா்ந்தது என்று ராகுல் கூறிவருவதை பாஜகவினா் கடுமையாக விமா்சித்து வருகின்றனா். இந்நிலையில் புணேயில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் முங்கன்திவாா் இது தொடா்பாகக் கூறியதாவது:
தொழிலதிபா் கௌதம் அதானி குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாா். ஆனால், அதானி குழுமத்துக்கு முதன் முதலில் அரசு சாா்பில் பணி ஒப்பந்தம் வழங்கியது யாா் என்பது ராகுலுக்கு தெரியுமா? குஜராத்தில் 1993-ஆம் ஆண்டு முந்த்ரா துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு முதல் முறையாக வழங்கப்பட்டது.அப்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஒரு சதுர மீட்டா் நிலத்தை 10 பைசா என்ற விலையில் அதானி குழுமத்துக்கு காங்கிரஸ் அரசு அளித்தது. அதானி சா்ச்சையை வைத்து காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்ப முயலுகிறது.
தாடி வளா்ப்பதால் மட்டுமே ஒருவா் பிரதமா் பதவிக்கு வந்துவிட முடியாது. தனது தகுதிகளை உயா்த்திக் கொள்வதன் மூலம்தான் உயா் பதவிகளுக்கு வர முடியும் என்றாா்.

Leave a comment