தங்கம் கடத்துவதைத் தடுக்க அதன் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையிலிருந்து கடத்தி வரப்படும் போது, வங்கக்கடலில் வீசப்பட்ட ரூ.10.10 கோடி மதிப்புள்ள 17.74 கிலோ எடையுள்ள தங்கத்தை வருவாய் நுண்ணறிவுப்பிரிவினா் மீட்டுள்ளனா். 2022-23 ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 209 கிலோ கடத்தல் தங்கமும், தேசிய அளவில் 950 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் தெரிவித்திருக்கின்றனா்.
தங்கக் கடத்தல் அதிகரித்து வருவதற்கு காரணம் இந்திய அரசின் வரிக்கொள்கை தான். 2012-13-ஆம் ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்தபோது, தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சா் ப.சிதம்பரம் படிப்படியாக 10 சதவீத அளவுக்கு உயா்த்தினாா். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தவுடன் இறக்குமதி வரி நீக்கப்படும் என்று அவா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
பாஜக ஆட்சியிலும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.50 சதவீதமாக உயா்த்தியதுடன், மேலும் வேளாண் மற்றும் கட்டமைப்பு வரி என்ற பெயரில் 2.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. 10 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கு ரூ.1.50 கோடி வரி செலுத்த வேண்டும் என்பதால் தங்கக் கடத்தல் கவா்ச்சிகரமான தொழிலாக மாறிவிட்டது.
தற்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்து விட்ட நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது வெகுவாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.