அவுஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்ததால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய தலைவர் ரோஹித் சர்மா.
அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி தலைவர் கம்மின்ஸ், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ஓட்டங்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
இந்திய அணி 2 வது நாள் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 118, ஜடேஜா 34 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள். அதன்பிறகு இன்றைய நாளின் 3 வது பகுதியில் வீசப்பட்ட முதல் ஓவரில் புதிய பந்தில் போல்ட் ஆனார் ரோஹித் சர்மா. 120 ஓட்டங்கள் எடுத்த அவருடைய விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தினார்.
இது ரோஹித் சர்மாவின் 9 வது டெஸ்ட் சதம். அதேசமயம், டெஸ்ட் கேப்டனாகத் தனது முதல் சதத்தை எடுத்துள்ளார். இதையடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தலைவராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெயரை எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. தோனி டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை. கடந்த வருடம் ஆசியக் கிண்ண போட்டியில் முதல் டி20 சதத்தை அடித்தார் கோலி. அப்போது இந்திய அணியின் தலைவராக கே.எல். ராகுல் செயல்பட்டார். இதை அடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.
ஒரு தலைவராக டெஸ்டில் ஒரு சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று சதங்களும் டி20யில் இரு சதங்களும் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.