துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு இலவச விமான டிக்கெட்டுகளை விமான நிறுவனங்கள் வழங்கியதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
துருக்கியில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் மற்றும் பெகாசஸ் ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்தான்புல், அங்காரா, அண்டால்யா மற்றும் பிற பாதுகாப்பான இடங்களுக்கு இலவச டிக்கெட்டுகளை அறிவித்தன.
இதையடுத்து காசியான்டெப், ஹடாய், நூர்டகி மற்றும் மராஷ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் உள்ள சில விடுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
துருக்கி மற்றும் சிரியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்களை பசியும் விரக்தியும் ஆட்கொண்டுள்ளதால், பரவலான பேரழிவு மற்றும் குளிருக்கு மத்தியில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய பலர் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர், இடம் பெயர்ந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன, இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள, இறந்தவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றன.