மகளிர் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுக்க, இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ஓட்டங்களை எட்டி வென்றது. இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகி ஆனார்.
முன்னதாக, ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில், காயம் கண்டுள்ள ஸ்மிருதி மந்தனாவுக்குப் பதிலாக ஹர்லீன் தியோல் சேர்க்கப்பட்டிருந்தார். நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க பார்ட்னர்ஷிப்பில் ஜவெய்ரா கான் 1 பவுண்டரியுடன் 8 ஓட்டங்கள் சேர்த்து 2 ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தலைவர் பிஸ்மா மரூஃப் நிலைத்து நின்று ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார். மறுபுறம் முனீபா அலி 1 பவுண்டரியுடன் 12 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, நிதா தார் “டக் அவுட்´ ஆனார். சிட்ரா அமீன் 11 ஓட்டங்கள் அடித்து வீழ்ந்தார்.
ஓவர்கள் முடிவில் பிஸ்மா 7 பவுண்டரிகளுடன் 68, ஆயிஷா நஸீம் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 43 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. இந்திய பெலிங்கில் ராதா யாதவ் 2, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் 150 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை யஸ்திகா பாட்டியா 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்கள் சேர்க்க, உடன் வந்த ஷஃபாலி வர்மா 4 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் கெரர் 2 பவுண்டரிகளுடன் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53, ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 2, சாதிக் இக்பால் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை 15 ஆம் திகதி சந்திக்கிறது.