Post

Share this post

பார்க்க வேண்டிய ‘காதல்’ திரைப்படங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். இளமையின் தீவிரத்தின் ஒருபகுதி முழுவதும் காதலாலும் அதன் பரவசங்களாலும் நிறைந்தது. காதலிக்காமல் இருப்பதைவிட காதலில் வெற்றியையோ அல்லது தோல்வியையோ கண்டவர்கள் அதிலிருந்து மதிப்பில்லாத அனுபவத்தை பெறுகிறார்கள்.

காதலுக்கென்றே பல படங்கள் இருந்தாலும் பார்த்து ஆக வேண்டிய 10 படங்கள்…

1. டைட்டானிக்

காதல் திரைப்படம் என்றாலே முதலிடத்தில் இருப்பது டைட்டானிக்காகவே இருக்கும். உலகளவில் இப்படத்தைப் பார்க்காதவர்கள் மிகச்சிலரே என்கிற அளவிற்கு ஒரு கப்பலில் ஜாக் ரோஸின் காதல் காவியம் பிரிவில் முடிவடையும் போது கண்கலங்காதவர்கள் அரிது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவும் ரசிகர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் 3டியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

2. 96

தமிழ் காதல் படங்களில் தனித்துவமான இடத்தில் இருக்கும் திரைப்படம் 96. வழக்கமாக நாயகனும் நாயகியும் சந்தித்து, காதலித்து, ஒருவரை ஒருவர் வெறுத்து பின் இணையும் பாணியில் இல்லாமல் சொல்லப்படாத காதலை தன் பேரிளம் பருவம் வரை சுமந்து திரியும் நாயகன் ராம்(விஜய் சேதுபதி), தன் காதலியான ஜானுவை(திரிஷா) 20 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும்போது மீண்டும் உருவாகும் அழகான காதலையும் கடந்து சென்ற காலத்தின் வலியையும் அதன் உணர்ச்சிகளையும் மிகச்சிறந்த காட்சிகளின் வழியாக இயக்குநர் பிரேம் குமார் கடத்தியிருப்பார். ’ரொம்ப தூரமா போயிட்டியா ராம்’? ஜானுவின் கேள்விக்கு ‘உன்ன எங்க இறக்கிவிட்டனோ அங்கயேதான் நிக்கறேன்’ என்கிற ராமின் பதில் ஒருகணம் நிலைகுலைய வைத்துவிடும்.

3. மதராசப்பட்டினம்

ஆர்யா – எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மதராசப்பட்டினம். இந்திய சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாக சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவானது. ஆங்கிலேயரான எமியை சலவைத் தொழிலாளியான ஆர்யா காதலிக்கும் விதமும் அதை வெளிப்படுத்தும் முறையும் என ஒரு கவிதையைப்போல படம் முழுவதும் பிரிவின் ஏக்கத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் கடத்தியிருப்பார். முக்கியமாக, இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இழந்த காதல் என்பது எத்தனை வலிமையானது என்பதை காட்டும்படியாக உருவாக்கப்பட்டிருக்கும்.

4. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்

தமிழில் நல்ல காதல் திரைப்படங்களின் பட்டியலை எடுத்தால் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படம் பெரிதாக இடம்பெறுவதில்லை. ஆனால், காதலின் அழுத்தத்ததையும் ஒரு பெண் ஆணை நம்பினால், வெறுத்தால் என்ன நடக்கும் என்கிற எதார்த்தத்தை கச்சிதகாக முன்வைத்த திரைப்படங்களில் ஒன்று இது. தான் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகனால் திருமணம் செய்யமுடியாமல் போகிறது. அதேநேரம், நாயகி நாயகன் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து அவன் மேல் வெறுப்புடன் இருக்கிறாள். பின், வேறு ஒருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், நாயகனால் இந்த இழப்பைத் தாங்க முடியாமல் திருமணத்திற்குப் பின்பும் நாயகியின் பின்னால் சீரழிந்த மனதுடன் அலைகிறான். அவள் மனதில் இருப்பது கணவனா முன்னாள் காதலனா என்கிற சிக்கலான கேள்வியை முன்வைத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு படம் நகரும். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் மனம் உடையும் அளவிற்கான பதிலை இயக்குநர் வைத்திருப்பார். காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.

5. நித்தம் ஒரு வானம்

காதல் தோல்வியில் பெரும்பாலும் நினைத்து வருத்தப்படும் விசயங்களில் ஒன்று பிரிந்து சென்றவர்களின் நினைவுகளும் அவர்களுடன் செலவிட்ட காலங்களும்தான். நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்யப்போவதாகச் சொல்லிப் பிரிந்ததும் பெரிய மன அழுத்தததிற்கு ஆளாகிறான். அவனை அந்த வருத்ததிலிருந்து மீட்க மருத்துவர் ஒருவர் டைரி ஒன்றைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். இரண்டு கதைகள் அதில் இருக்கும். ஆனால், அக்கதைகளுக்கு முடிவு எழுதப்பட்டிருக்காது. ஆனால், நாயகனுக்கு அக்கதைகளின் முடிவைத் தெரிந்துகொள்ள பெரிய ஆர்வம். மருத்துவரிடம் கேட்டதும் அவை கதைகள் அல்ல உண்மையான சம்பவங்கள் எனத் தெரிய வருகிறது. கதையில் தொடர்புடையவர்களைத் தேடிச் செல்லும் பயணமே இப்படம். இணைந்த காதலர்களின் மற்றொரு பக்கத்தையும் அவர்களின் காதலை ஆழமாகவும் அழகாகவும் சொல்கிறது நித்தம் ஒரு வானம்.

6. லவ் டுடே

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம். நகைச்சுவை பாணியில் உருவான இப்படத்தில் காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமான ஒன்று என்கிற விசயத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண் – பெண் உணர்வு நிலைகளைக் கச்சிதமாக பேசியிருந்தது. புதிய தலைமுறை இளைஞர்களால் பெரிது ரசிக்கப்பட்டது.

7. அன்னாயும் ரசூலும் – மலையாளம்

ஃபகத் பாசில் – ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் அன்னாயும் ரசூலும். கார் ஓட்டுநரான ரசூலுக்கும் துணிக்கடையில் வேலை செய்யும் அன்னாவுக்கும் துளிரும் காதலே இப்படம். அதிகம் பேசாத இருவர் காதலிக்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படம் உணர்ச்சிகளும் உடல்மொழிகளுமென படம் நகர்ந்தாலும் இறுதிக்காட்சியின் பயங்கரம் பெரும் தன்னிறக்கத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. இயக்குநர் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும் படத்தில் பேசப்படும் காதல் குறித்தான பார்வையும் அட்டகாசமான திரையனுபவத்தை தருபவை.

8. இஷ்க்

மலையாளத்தில் வெளியான இஷ்க் திரைப்படம் காதலில் ஆணின் ஆணவத்தையும் சந்தேகத்தையும் பேசுகிறது. ஓர் இரவில் காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பார்த்துவிடுகிறார். அதன்பின், காதலர்களை மிரட்டி பணம் பறிக்க முயலும்போது நாயகியை ஓட்டுநர் பாலியல் ரீதியாக சீண்டுவதைக் கண்டும் நாயகனால் எதுவும் செய்யமுடியவில்லை. பின் அவர்களிடமிருந்து தப்பிய காதலர்களுக்குள் பிரச்னை ஏற்படுகிறது. காதலன் தன் காதலியிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உன்னை என்ன செய்தான்? என கேள்விகளால் துளைக்கிறான். பின், நாயகன் ஓட்டுநரின் மனைவியிடம் தவறாக நடந்தால்தான் அவனை பழி வாங்க முடியும் என நினைத்து அவன் வீட்டிற்குச் செல்கிறான். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் நவீன யுக உறவில் ஆண்கள் செய்யும் தவறுகளை ஆராயும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

9. சாய்ரட் – மராத்தி

சந்தர்ப்பங்களில் அடிப்படையிலான பிரிவை விட திட்டமிட்டு காதலர்கள் பிரிக்கப்படுவது வலி மிகுந்தது. அதில் மிகமுக்கியமானது சாதி. அப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனும் மேல்சாதியைச் சேர்ந்த நாயகியும் காதலிக்கிறார்கள். இது தெரிய வரும்போது நாயகன் தாக்கப்படுகிறான். இதனால், காதலர்கள் ஊரைவிட்டு ஓடுகிறார்கள். அதன்பின், என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பதபதைக்கும் திரைக்கதையுடன் உருவாக்கி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சாய்ராட். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நம் மனசாட்சியை உலுக்கக்கூடியது.

10. தி லன்ஞ் பாக்ஸ் – ஹிந்தி

இர்பான் கான் – நிம்ரட் கவுர் நடிப்பில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ’தி லன்ஞ் பாக்ஸ்’. தன் கணவருக்காக மதிய உணவை சமைத்து டிப்பன் பாக்ஸில் அனுப்புகிறார் நாயகி. ஆனால், அதை தவறுதலாக நாயகன் (இர்பான்) சாப்பிட்டு விடுகிறார். அதன்பின், ஒவ்வொரு நாளும் இதேபோல் நடக்கிறது. சமையல் அருமையாக இருப்பதாக இம்ரான் டிப்பன் பாக்ஸ் வழியாக கடிதம் எழுதி அனுப்பிறார். அதேபோல் நாயகியிடமிருந்து பதில் கடிதங்கள் உணவுடன் வருகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருவரும் காதலிக்கத் துவங்கிறார்கள். இறுதியில் என்ன நடக்கிறது? என்பதை சுவாரஸ்ய கதைக்கருவுடன் உருவாக்கிறார் இயக்குநர்.

Leave a comment