Post

Share this post

500 கோடி வசூலைத் தாண்டிய பதான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பதான் படம் கடந்த மாதம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ. 970 கோடி வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ. 502 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய படம் – ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2.
இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் மற்றும் வேறு சில திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை ‘பதான் தினம்’ கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்தியா முழுவதும் சலுகைக் கட்டணமாக மேற்கூறிய திரையரங்குகளில் ரூ. 110 மட்டுமே வசூலிக்கப்படும் என பதான் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
டிக்கெட் கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பட வசூல் விரைவில் ரூ. 1,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment