Post

Share this post

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

கடலூர் மாவட்டம், வடலூரில் ரூ.3.50 லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக 4 பேரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வடலூர், திரு மெடிக்கல் தெருவைச் சேர்ந்த அருள்முருகன் மனைவி சுடர்விழி (37). இவர் 2 மாத ஆண் குழந்தையைப் பராமரித்து வந்த நிலையில், அந்தக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவது தொடர்பாக தனது உறவினர் பெத்தநாயக்கன்குப்பத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை அணுகினார். ஆனால், பிறப்புச் சான்றிதழ் பெற முடியாத நிலையில், அந்தக் குழந்தையை அரசின் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்க விஸ்வநாதன் திட்டமிட்டார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை விஸ்வநாதன் நாடினார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அரவிந்த் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விஸ்வநாதனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, சுடர்விழியிடமும் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் அந்தக் குழந்தை வடலூர் செவன்த்டே பள்ளி தெருவைச் சேர்ந்த அப்துல் சபான் மனைவி சித்த மருத்துவர் மெஹருன்நிஷாவால் (67) 13.12.2022 அன்று ரூ.3.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கப்பட்டது எனவும், பராமரிப்புக்காக அவர் தன்னிடம் குழந்தையை கொடுத்ததாகவும் தெரிவித்தாராம்.
இதுதொடர்பாக மெஹருன்நிஷாவிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மீது அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் குழந்தை கடத்தல் வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37), சீர்காழி வட்டம், சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் (47) ஆகியோருடன் சேர்ந்து மொத்தம் 3 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டாராம்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா. அரவிந்த் அளித்த புகாரின்பேரில் வடலூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மெஹருன்நிஷா, சுடர்விழி, ஷீலா, ஆனந்தன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சுடர்விழியிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு, சென்னை சிறப்பு தத்து வள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a comment