Post

Share this post

‘பகாசூரன்’ – திரைவிமர்சனம்!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘பகாசூரன்’.
இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ், தரக்‌ஷி என பலர் நடித்துள்ளனர்.
தனது அண்ணன் மகள் மேற்கொண்ட மர்மமான தற்கொலையைத் தொடர்ந்து அதற்கான காரணத்தைத் தேடுகிறார் முன்னாள் மேஜராக வரும் நடிகர் நட்டி. அதேசமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குநர் செல்வராகவன். இருவரும் சந்திக்கும் புள்ளியே ‘பகாசூரன்’ திரைப்படம்.
சாணிக்காயிதம், பீஸ்ட் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகராக களமிறங்கியிருக்கிறார் செல்வராகவன். கடலூரைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான செல்வராகவனுக்கு தனது மகளின் மீது கொள்ளைப் பிரியம். அவரது விருப்பத்திற்காக பெரம்பலூர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கிறார். அங்கு அவருக்கு நிகழும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்தே கதை நகர்கிறது. பல இடங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்திருக்கிறார். சிவ பக்தராக வரும் இடங்களில் நல்ல நடிகராக ஈர்க்கிறார்.
இவருக்கு இணையாக படம் முழுக்க வருகிறார் நட்டி. அவரின் அண்ணன் மகள் தனது காதலனின் வற்புறுத்தலின்பேரில் இணையத்தில் நிர்வாண விடியோக்களை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்குள் சிக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடாக, பாலியல் தொழில் செய்யும் கும்பல் அப்பெண்ணை மிரட்டுகிறது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலைக்குள்ளாகிறார். இது அவரின் சித்தப்பா நட்டிக்கு தெரிய வருகிறது. இதுபோல பல பெண்கள் சிக்கியிருப்பதை அறியும் அவர் அவர்களை மீட்க இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு தகப்பனைத் தேடி அலைகிறார். இப்படி செல்வராகவன் பயணமும், நட்டியின் பயணமுமே ஒட்டுமொத்த திரைக்கதை. படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நன்றாக உதவியிருக்கிறது. செல்வராகவனுக்கு அமைக்கப்பட்டுள்ள பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் தவிர மற்ற எதுவும் ரசிக்கும்படியாக அமையவில்லை. தேவையான ஒளிப்பதிவு. தொழில்நுட்ப ரீதியாக தனது முந்தைய படங்களைவிட சிறப்பாக செய்திருக்கிறார் மோகன் ஜி.
இவற்றையெல்லாம் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது?
50 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையிலிருந்து உருவாகியிருக்கிறது ‘பகாசூரன்’. பல நூறாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களது அடுப்பங்கறையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை பதட்டத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதையாக வந்திருக்கிறது ‘பகாசூரன்’.
பெண்களைக் காக்க வேண்டும் என சொல்ல வரும் இயக்குநர் அதற்காக படத்தில் ஆபாச நடனம் வைப்பதெல்லாம் கண்முன் தெரியும் முரண்.
செல்வராகவனின் மகள் முதல் தலைமுறை பட்டதாரியான பிறகு மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக ஒரு வசனம் வருகிறது. “ஊருக்குள்ளயே படிக்க வைக்க வேண்டியதுதான”, ”நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு கண்காணிக்கனும்” என இப்படிப்பட்ட வசனங்கள் படம் முழுக்க தொடர்கின்றன. எப்படி இருந்த செல்வராகவனை இப்படி வந்து நிறுத்திவிட்டனரே எனத் தோன்றுகிறது.
பல இடங்களில் படத்தின் லாஜிக் தடுமாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற மேஜராக வரும் நட்டி ஆதாரங்களைத் தேடி ஓடுகிறார். செல்வராகவன் அடுத்தடுத்து கொலைகளை நடத்திவிட்டு சென்றுகொண்டிருக்கிறார். இடையில் என்ன செய்கிறது காவல்துறை?
சற்று பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல்பாதி சற்று கவனிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அப்படியே எதிர்மாறாக நிற்கிறது இரண்டாம் பாதி. இணையத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது நோக்கமெனில் அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்திருக்கலாம். ஆனால் அந்த பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது போன்று காதலையும், பெண் உரிமை கோருவோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் அரசியல் எதிர்ப்பாளர்களை கதைக்குள் இழுத்துவிட்டதன் விளைவாக தடுமாறி நிற்கிறான் ‘பகாசூரன்’.
செல்போன் மூலம் நடைபெறும் பாலியல் தொழிலும், அதனால் ஏற்படும் பெண்களுக்கான பாதிப்பைக் குறித்தும் பேச முனைந்திருக்கிறார் இயக்குநர். இணையத்தில் கிடைக்கும் ஆபாச செயலிகளின் பாதிப்பைக் குறித்து சற்று விரிவாக திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் அதுகுறித்து எந்த விவரங்களும் இல்லாமல் கதை நகர்கிறது.
படத்தில் ராதாரவி தொடக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். பெண்களின் உரிமைகளைப் பேசுகிறார். அவர் எப்படி பின்னர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் என்பதை உங்களின் எதிர்பார்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.
ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து வருவது, செல்போன்களை பயன்படுத்துவது என சின்ன சின்ன விஷயங்களைக் கூட அபாயமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது ‘பகாசூரன்’.
திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை காட்டும் வகையில் ஒரு பாடல் வருகிறது. அதில் செல்வராகவனின் மகள் அவரது காலை அழுத்திவிடுவார். அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இயக்குநருக்கு இருந்திருக்காது போல.
ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனை பெற்று தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த ‘பகாசூரன்’ கெளரவம், ஒழுக்கம், இத்யாதி, இத்யாதி என பெண்ணையும் சுமைகளை சுமக்கச் சொல்லியிருக்கிறது.
படத்தின் இறுதியில் பேசும் செல்வராகவன், செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானதாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பேசும் நட்டி நமது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.
பெண்கள் வெளியில் வரட்டும். கல்வி கற்கட்டும். அவர்களின் உடலை இன்னும் ஆபத்தானதாகக் காட்டி அவர்களின் பாதைகளில் குழிவெட்டி காத்திருக்க வேண்டாம்.

Leave a comment