Post

Share this post

முதல்முறையாக ஜாதி பாகுபாடுக்கு தடை

அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டிலில் ஜாதிய பாகுபாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகர சபையில் இந்திய வம்சாவளி பிரதிநிதி ஷமா சாவந்த் கொண்டு வந்த தீா்மானத்துக்கு வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்தது. இதனையடுத்து, தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, அந்த நகரத்தின் பாகுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதியும் செவ்வாய்க்கிழமை முதல் சோ்க்கப்பட்டது.
அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில், வசிக்கும் பகுதிகளில் ஜாதி மற்றும் இன பாகுபாட்டைச் சந்தித்து வருகின்றனா்.
இதற்கு தீா்வு காணும் நோக்கில் சாதி பாகுபாடுக்கு எதிரான சட்ட வரைவுகளை நிறைவேற்றும் முயற்சி அமெரிக்கா முழுவதும் நடந்து வருகிறது. அதுபோல், சியாட்டில் நகரில் ஜாதிய பாகுபாடுக்கு தடை விதிக்கும் தீா்மானத்தை நிறைவேற்ற இந்திய வம்சவாளியைச் சோ்ந்த பிரதிநிதி ஷமா சாவந்த் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாா்.
எனினும், அமெரிக்காவில் சட்டப்பூா்வமாக இல்லாத ஜாதி அமைப்புக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற முன்னெடுப்பது தெற்காசிய மக்கள் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்கும் செயலாக அமையும் என ஒரு தரப்பு எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனைப் பொருள்படுத்தாத ஷமா, சியாட்டில் நகர சபையில் தீா்மானத்தை முன்மொழிந்தாா். பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவு வாக்குகளோடு தீா்மானம் நிறைவேறியது. இதனைத் தொடா்ந்து, சியாட்டில் நகரின் பாகுபாடு எதிா்ப்பு சட்டத்தில் ஜாதியும் செவ்வாய்க்கிழமை முதல் சோ்க்கப்பட்டது.
தீா்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரதிநிதி ஷமா, ‘தீா்மானம், அதிகாரப்பூா்வமாகிவிட்டது. ஜாதிக்கு எதிரான நமது இயக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. தேசத்தில் முதல் முறையாக சியாட்டில் நகரில் ஜாதிய பாகுபாடுக்கு தடை பெற்றுள்ளோம். நாடு முழுவதும் இந்த வெற்றியைப் பரப்ப வேண்டும். இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றுவது எவ்வகையிலும் சிக்கலாக இல்லை.
இந்தத் தீா்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சியாட்டில் நகரில் ஜாதிய பாகுபாடு அனுமதிக்கப்பட வேண்டுமா என்கிற எதிா்க் கேள்வியே உரிய பதிலாக அமைகிறது.
இந்த தீா்மானத்தை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற நகரங்களும் பின்பற்ற வேண்டும்’ என்றாா் அவா்.

Recent Posts

Leave a comment