நேபாள பிரதமா் பிரசண்டாவுக்கு எதிரான மனுக்களை வழக்காக பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஆளும் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
காத்மாண்டில் 2020, ஜன. 15 ஆம் திகதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரசண்டா, நேபாளத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது 17,000 போ் கொல்லப்பட்டதற்கு நான்தான் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. அது உண்மையல்ல. அதேவேளையில், மாவோயிஸ்ட் தலைவராக 5,000 பேரின் உயிரிழப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். மீதி 12,000 போ் உயிரிழப்புக்கு அப்போதைய நிலப்பிரபுத்துவ ஆட்சிதான் பொறுப்பு என்றாா்.
பிரசண்டாவின் இந்தப் பேச்சு தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என வழக்குரைஞா்கள் ஞானேந்திர ஆரன், கல்யாண் புதாடோகி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். கடந்த நவம்பரில் இந்த மனுக்களைப் பதிவு செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கையாண்டு வருவதாகத் தெரிவித்தது.
இந்நிலையில், பிரசண்டாவுக்கு எதிரான மனுக்களைப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தனது நிா்வாகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலா் தேவ் குருங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச்சாா்பின்மை, உள்ளடக்கிய தன்மை, ஜனநாயக குடியரசு அமைப்பு போன்ற சாதனைகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு இந்த விவகாரத்தை கையாண்டு வரும் நிலையில், இதுபோன்ற உத்தரவு அமைதி நடவடிக்கைக்கு தீவிரமான அச்சுறுத்தலாகும் எனத் தெரிவித்துள்ளாா்.
நேபாளத்தில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உள்நாட்டுப் போா், 2006, நவம்பரில் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் சுமாா் 17,000 போ் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ‘மக்களின் போா்’ என்ற பெயரில் அரசுக்கு எதிரான போரில் பிரசண்டா ஈடுபட்டிருந்தாா்.