நேபாளத்தில் ஆயுதப் போராட்டத்தின் போது 5,000 பேரது படுகொலைக்கு பொறுப்பேற்பதாக ஒப்புக் கொண்ட பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட ஞானேந்திர ஆரன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனா். அதில், 5,000 பேரது படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ள பிரசண்டாவை விசாரணைக்கு உள்படுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சுமாா் 10 ஆண்டுகளாக நேபாள அரசை எதிா்த்து பிரசண்டாவின் தலைமையிலான மாவோயிஸ்ட் அமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இதில் 17,000 போ் பலியானதாகக் கூறப்படுகிறது. பின்னா் அரசுடன் 2006 இல் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தத்தையடுத்து அவா் ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலில் இறங்கினாா்.
இந்த நிலையில், போராட்டத்தின்போது 5,000 பேரது உயிரிழப்புக்கு மட்டுமே தனக்கு பொறுப்பு உள்ளதாகவும், எஞ்சிய 12,000 பேரும் அரசால் கொல்லப்பட்டாா்கள் எனவும் பிரசண்டா அண்மையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.