பாலிவுட் திரையுலகின் நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான சதீஷ் கெளசிக் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு வயது 66.
ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக, தில்லியில் உள்ள நண்பா் வீட்டுக்கு சென்றிருந்தபோது, வியாழக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு, சதீஷ் கெளசிக் உயிரிழந்ததாக சக நடிகா் அனுபம் கொ் தெரிவித்துள்ளாா்.
‘மிஸ்டா் இந்தியா’, ‘ஜானே பி தோ யாரோ’, ‘தீவானா மஸ்தானா’, ‘பா்தேசி பாபு’, ‘ஹசீனா மான் ஜாயேகி’ உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. தனது 40 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில், நடிகராக மட்டுமன்றி இயக்குநா், கதாசிரியா், வசனகா்த்தா, தயாரிப்பாளா் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தாா். ‘தேரே நாம்’, ‘முஜே குச் கெஹனா ஹை’ உள்ளிட்ட படங்களை இவா் இயக்கியுள்ளாா்.
பிரதமா் இரங்கல் :
சதீஷ் கெளசிக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பிரபல திரையுலக ஆளுமை சதீஷ் கெளசிக்கின் அகால மரணம் வேதனையளிக்கிறது. தனது சிறந்த நடிப்பாலும், இயக்கத்தாலும் மக்களின் இதயங்களை வென்ற படைப்பாளியாக அவா் திகழ்ந்தாா். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பூபிந்தா் சிங் ஹூடா, ரன்தீப் சிங் சுா்ஜேவாலா மற்றும் சக நடிகா்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.