வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.
குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி, பிள்ளைகள் படுக்கையில் தூங்கும் நிலையில் போர்வையால் நன்கு போர்த்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு பரிசோதனை நேற்றும், இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில் இரு பிள்ளைகளும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இரு குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், அவரதும், கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதியான முடிவுக்கு வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குடும்பத்தினர் கூண்டோடு இறப்பதற்கு முதல் இரவு, அதாவது திங்கட்கிழமை இரவு அந்த வீட்டுக்கு வந்து சென்றிருக்கின்றது என்று பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ள ஒரு ஹயஸ் வாகனம் பற்றிய விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.