Post

Share this post

குழப்பங்களால் தடுமாறி நிற்கும் அகிலன் – திரைவிமர்சனம்!

பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லாபத்திற்காக எளிய மக்களை பசியில் வாட்டும் வியாபாரத்திற்கு எதிரான கதையாக வந்திருக்கிறான் அகிலன். ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற அகதி மக்கள் ஒரு சிறுதீவில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்கள் காலியாக பசியால் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு உதவப் போய் போதை கும்பலில் சிக்கிக் கொள்கிறார் நடிகர் அகிலனின் (ஜெயம்ரவி) அப்பா. அவரைப் போலவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டவிரோத கடத்தல் மூலம் கடல் வழியாக உதவப் போராடுகிறார் அகிலன். அவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே அகிலனின் கதை.
படம் தொடங்கும்போதே மறைந்த இயக்குநர் ஜனநாதனுக்கு நன்றி செலுத்தப்பட்டுள்ளது. படத்திலும் தொழிற்சங்கத் தலைவருக்கு ஜனநாதன் பெயரே சூட்டப்பட்டுள்ளது. அவர் பேச விரும்பிய அரசியல் சார்ந்த கதைதான் அகிலன். படத்தில் நாயகனாக மிடுக்காக இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. சில இடங்களில் பூலோகம் ஜெயம் ரவியாகவே தெரிகிறார். படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கிறது. தனது முந்தைய படங்களைப் போலவே ஆக்ரோஷமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இணையாக பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இருவருமே ஆங்காங்கே சில காட்சிகளுக்கு மட்டுமே வருகின்றனர்.
தன்யா ரவிச்சந்திரன் கதாபாத்திரம் எதற்காக என்கிற அளவு ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு என்பது இல்லாமல் இருக்கிறது. பிரியா பவானி சங்கர் ஆரம்பக் காட்சியில் காவல்துறை உடையில் வருகிறார். ஆனால் அதற்குண்டான நடிப்பை கொடுப்பதில் தடுமாறியிருக்கிறார். அவரை காவல்துறையாக கடத்துவதில் இயக்குநர் தவித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்களில் திடீரென அவர் குரலுக்கு பதிலாக வேறு ஒருவரின் குரல் இணைக்கப்பட்டிருப்பது எல்லாம் அப்பட்டமாக திரையில் தெரிகிறது.
இவர்களுடன் ஹரீஷ் பேராடி, சிராக் ஹானி, ஹரிஷ் உத்தமன் என பலர் நன்றாக நடித்துள்ளனர். வில்லனாக வரும் தருண் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம்.
சட்டவிரோதமாக கப்பல் மூலம் கடத்தல் தொழிலில் ஈடுபடும் அகிலன் தமிழன்னை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்துவதற்காக தனியே கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். அதற்காக பலரை பகைத்துக் கொள்கிறார். தனது முன்னாள் முதலாளி, நண்பன் என பலரையும் எதிர்கொள்ளும் அகிலன் படத்திற்கான லாஜிக்கை மீறி பல காட்சிகள் பயணிப்பது திரைக்கதையில் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என சொல்ல வைக்கிறது.
துறைமுகத்தில் இருக்கும் அகிலன் நினைத்த மாத்திரத்தில் எப்படி கொலை செய்கிறார்? ஒரு தனி மனிதனாக எப்படி இத்தனை பேரை எதிர்க்க முடிகிறது? உடன் இருக்கும் நண்பனை எதிர்த்துவிட்டு அவருக்கு துரோகி பட்டம் கொடுத்து நான் தான் உன்னை துரோகியாக்கினேன் என வசனம் பேசுவது ஏன்? என பல கேள்விகள் படத்தைப் பார்க்கும்போது மனதிற்குள் எழுகிறது.
படத்தின் முதல் பாதியிலேயே விளக்கியிருக்க வேண்டிய கதையை இரண்டாம் பாதி வரை கடத்தியிருக்கின்றனர். முதல் பாதியைப் பார்த்த பிறகு இதுவரை என்ன கதை நடந்தது என கேட்கத் தோன்றுகிறது. அதற்கு சற்று ஆறுதலளிக்கும் வகையில் இரண்டாம் பாதி சற்று தொடங்கினாலும் இறுதி 30 நிமிடங்கள் படம் எங்கெங்கோ பயணிக்கிறது. வெறும் சண்டைக்காட்சிகளுடன், லாஜிக் குழப்பங்களால் நிரம்பியிருக்கிறது இரண்டாம் பாதி.
நல்ல கதை, சொல்ல விரும்பும் கருத்து முக்கியமானது என்றாலும் அதனை ரசிகர்களுக்கு புரியும் வகையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக பாடல்களும், பின்னணி இசையும்கூட பெரிதாக கைகொடுக்கவில்லை. ஒளிப்பதிவு சற்று திரைப்படத்திற்கு ஆறுதலாக இருக்கிறது. துறைமுகத்தை காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் பணி மற்றவையுடன் ஒப்பிடுகையில் படத்திற்கு உதவியாக உள்ளது.
சட்டவிரோதமாக கடத்தல்கள் எல்லாம் நடக்கும்போது, எளிய மக்களுக்கு உதவுவதை ஏன் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பும் அகிலன் அதனை இன்னும் அழுத்தமாக உணரும் வகையில் உருவாகியிருக்கலாம்.

Leave a comment