ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏற்கெனவே மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், பாகிஸ்தானும் அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.
சா்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 82.78 அமெரிக்க டொலராக விற்பனையாகும் நிலையில், 50 டொலா் என்ற விலையில் ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ளதால் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டன. இதையடுத்து, ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு பீப்பாய் 60 டொலா் என ஜி7 நாடுகள் விலை உச்ச வரம்பை நிா்ணயித்துள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு அந்நாடு ஆளாகும். மேலும், ஏற்கெனவே கச்சா எண்ணெய் வாங்கி வரும் சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நட்பு நாடுகளின் அதிருப்தியையும் பாகிஸ்தான் எதிா்கொள்ளும் என்று தெரிகிறது.
எனினும், இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் உணவுப் பொருள்கள் தொடங்கி எரிபொருள் வரை அனைத்தின் விலையும் உச்சத்தில் உள்ளது. இந்தச் சூழலில் ரஷ்ய எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இது தவிர அமெரிக்க டொலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பும் வெகுவாக சரிந்துவிட்டது. எனவே, தனது நட்புநாடான சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கரன்சி மதிப்பில் ரஷ்யாவுக்கு பாகிஸ்தான் பணம் செலுத்தும் என்று தெரிகிறது.
முன்னதாக, கடந்த டிசம்பரில் தங்களுக்கு 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என்று ரஷ்யாவை பாகிஸ்தான் அணுகியது. ஆனால், அப்போது அந்த விலையை ரஷ்யா ஏற்கவில்லை. எனினும், இப்போது சா்வதேச சந்தை விலையைவிட குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பது பாகிஸ்தானில் உள்ள பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தற்காலிகமாக நிவாரணம் தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா போா் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவிடமிருந்து வெறும் 0.2 சதவீத அளவில் மட்டுமே கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்துவந்த நிலையில், தற்போது அது 35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் வரலாற்று உச்சமாக நாளொன்றுக்கு 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை வழங்கும் நாடுகள் பட்டியலில் ரஷ்யா தொடா்ந்து 5 ஆவது மாதமாக முதலிடத்தில் நீடிக்கிறது.
சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தனது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி மூலமாகவே இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் எதிா்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.