Post

Share this post

3 ஆண்டுகளுக்கு பின் சதமடித்தாா் வீரர்!

அவுஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்று வரும் அகமதாபாத் டெஸ்ட் ஆட்டம் டிராவை நோக்கி செல்கிறது.
ஆட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை கிங் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 571 ஓட்டங்களைக் குவித்தது. மூன்று ஆண்டுகள் கழித்து 186 ஓட்டங்களுடன் அற்புதமாக சதமடித்தாா் கோலி.
பாா்டா் – கவாஸ்கா் கோப்பைக்கான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு ஆட்டங்களில் இந்தியாவும், மூன்றாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஆஸி. அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கு தகுதி பெற்று விட்டது.
இந்தியா அணி இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் அகமதாபாத் டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
அகமதாபாதில் நடைபெறும் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அஸ்திரேலியா 480 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 180 ஓட்டங்களையும், கிரீன் 114 ஓட்டங்களையும் விளாசினா். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா்.
இந்தியா 571 ஆல் அவுட் :
இந்நிலையில் இந்தியா நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை 289/3 என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கியது. கோலி 59 ஓட்டங்களுடன் களம் கண்டாா். ஜடேஜா 28, ஸ்ரீகா் பாரத் 44, அஸ்வின் 7, உமேஷ் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.
கோலி – அக்ஸா் படேல் வெற்றிக் கூட்டணி :
மறுமுனையில் விராட் கோலி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயா்த்தி வந்தாா். அவருக்கு உறுதுணையாக ஆல்ரவுண்டா் அக்ஸா் படேல் ஓட்டங்களை சேகரித்த நிலையில் இருவரும் இணைந்து 162 ஓட்டங்களை சோ்த்தனா்.
அக்ஸா் அரைசதம் 79 : அக்ஸா் படேல் 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசி அவுட்டானாா்.
3 ஆண்டுகள் கழித்து கோலி சதம் 186 :
சிறப்பாக ஆடிய விராட் கோலி கடந்த 2019 ஆண்டுக்கு பின் 3 ஆண்டுகள் கழித்து சதமடித்து தனது இருப்பை வெளிப்படுத்தினாா்.
15 பவுண்டரியுடன் 364 பந்துகளில் 186 ஓட்டங்களை விளாசினாா் விராட் கோலி. இது சா்வதேச அளவில் அவரின் 75 ஆவது சதமாக அமைந்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 178.5 ஓவா்களில் 571 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்ட ஆனது இந்தியா. நாதன் லயன், மா்ஃபி 3 விக்கெட்: ஆஸி. தரப்பில் நாதன் லயன் 3 – 151, டி மா்ஃபி 3 – 113 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஆஸி. இரண்டாம் இன்னிங்ஸ் 3/0:
பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களை எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3, குனேமான் 0 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனா்.
88 ஓட்டங்கள் முன்னிலை : அவுஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 88 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் ஒரு நாளே உள்ள நிலையில் அகமதபாத் டெஸ்ட் டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
நாதன் லயன் சாதனை :
இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் நாதன் லயன். அவா் 11 ஆட்டங்களில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி இச்சாதனையை புரிந்தாா். இதற்கு முன்பு இங்கிலாந்து ஸ்பின்னா் டெரக் அன்டா்வுட் 16 ஆட்டங்களில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா்.

Leave a comment