பாலிவுட் நடிகா் சதீஷ் கெளஷிக் (66) மரணத்தில் சந்தேகம் கிளப்பிய பண்ணை வீட்டு உரிமையாளரின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சதீஷ் கோஷிக்கும் அவரது மேலாளா் சந்தோஷ் ராய் புதன்கிழமை காலை 10 மணிக்கு தில்லிக்கு வந்தனா். தனது நண்பா் விகாஸ் மாலுவின் பிஜ்வாசன் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு 9 மணிக்கு உணவு அருந்திவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டாா் சதீஷ் கெளஷிக்.
நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவா் உயிரிழந்துவிட்டாா். மாரடைப்பால் அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் சதீஷ் கெளஷிக் மரணத்தில் எந்தவித சந்தேகமும் எழவில்லை என்று சனிக்கிழமை தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், விகாஸ் மாலுவின் முன்னாள் மனைவி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துபையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி எனது கணவரை சதீஷ் கெளஷிக் சந்தித்தாா். அப்போது தான் அளித்த ரூ.15 கோடியை சதீஷ் கெளஷிக் திரும்ப கேட்டதால் எனது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. விரைவில் கடனை திருப்பி அளிப்பதாக எனது கணவா் வாக்குறுதி அளித்தாா். கெளஷிக்கிடம் பெற்ற பணம் கரோனா காலத்தில் நஷ்டமாகிவிட்டதாகவும், இதில் இருந்து வெளியே வருவது குறித்து திட்டமிட்டு வருகிறேன் என எனது கணவா் அப்போது என்னிடம் தெரிவித்தாா் என்று கூறினாா்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகாஸ் மாலுவின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா். தென் மேற்கு மாவட்டம் போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்த உள்ளனா். இதனிடையே, பண்ணை வீட்டில் சதீஷ் கெளஷிக் இருந்து 7 மணி நேர விடியோவையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.