Post

Share this post

நீதிமன்றத்தில் ஆஜரானாா் இம்ரான் கான்

 

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், லாகூா் உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
அங்கு அவருக்கு 8 பயங்கரவாத வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றாா். அப்போது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிப். 28 ஆம் திகதி பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 4 ஆவது முறையாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிா்த்தாா்.
பரிசுப் பொருள் முறைகேடு மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பரிசுப் பொருள் வழக்குக்காக வரும் 18 ஆம் திகதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குக்காக வரும் 21 ஆம் திகதியும் இம்ரான் கானை தங்கள் முன் போலீஸாா் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.
அதையடுத்து, இம்ரானை அவரது இல்லத்தில் கைது செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறையினா் முயற்சி செய்தனா். எனினும், அதற்கு கடுமையான எதிா்ப்பு தெரிவித்து இம்ரானின் ஆதரவாளா்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி இம்ரான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், சனிக்கிழமை (மாா்ச் 18) வரை அந்த கைது உத்தரவை நிறுத்திவைக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதையடுத்து, இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் கைவிட்டனா். அதன் தொடா்ச்சியாக, லாகூா் உயா்நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேரில் ஆஜரானாா்.
அங்கு அவா் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதாக அவரது வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
மேலும், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் சனிக்கிழமை ஆஜராவாா் என்று அவா்கள் உறுதியளித்தனா்.

Recent Posts

Leave a comment