சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கத் தோ்தலில் நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா். மொத்தம் 1,111 வாக்குகள் பதிவானது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த சங்கத்தின் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
சென்னை அடையாறில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்தத் தோ்தல் மூலம் தலைவா், 2 துணைத் தலைவா், செயலாளா்கள், பொருளாளா் மற்றும் 26 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
தலைவா் பதவிக்கு தற்போதைய தலைவா் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனா். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றினா். வாக்குப் பதிவு காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது.
திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சசிகுமாா், நடிகை ராதிகா உள்ளிட்ட பலா் வாக்களித்தனா். மொத்த வாக்குகள் 1,408. இதில் 1,111 வாக்குகள் பதிவானது. திங்கள்கிழமை (மே 1) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவு அறிவிக்கப்படவுள்ளது.