அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கை!

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார்.
தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆகும் போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும் எனவும் “2048 இலங்கைக்கு அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதோடு தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் தான் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறோம்.” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியல்,பொருளாதார முறைகளில் மாற்றம் கொண்டுவருவது அவசியம் என்ற இளைஞர்களின் கோரிக்கை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். தலைவர்கள் என்ற வகையில் அவர்களின் குரல்களுக்கு செவிசாய்த்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது பொறுப்பு” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நமது நாட்டு தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகியிருப்பது வீண் என்று தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய, போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.