Post

Share this post

இலங்கையில் 12 சுற்றுலாப் பயணிகள் துஷ்பிரயோகம்!

இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும், இலங்கைக்கு சுற்றுலா வந்த 12 வெளிநாட்டு பெண்கள், யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான 113 சம்பவங்கள் தொடர்பில் இந்த 4 மாதங்களில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 113 சம்பவங்களில் அதிகமான சம்பவங்கள் ஐரோப்பாவில் இருந்து சுற்றுலா மேற்கொண்டவர்களை இலக்காக கொண்டு நடாத்தப்பட்டுள்ளமையும், அதற்கு அடுத்த படியாக ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் தரவுகள் ஊடாக வெளிப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல்கள் மற்றும் அவர்கள் செல்லும் பாதைகளில் வைத்து அவர்களது உடமைகள் திருடப்பட்டமை மற்றும் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் 67 சம்பவங்கள் இந்த 4 மாதங்களில் பதிவாகியுள்ள நிலையில் அதில் பெரும்பாலானவை தென் மாகாணத்தில் பதிவானதாக அறிய முடிகின்றது. இந்த குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஐரோப்பியர்கள் எனபதுடன் 21 பேர் ரஷ்ய பிரஜைகளாவர்.
6 அமெரிக்கர்களும் இவ்வாறான திருட்டுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 13 பேரில் 9 பேர் ஐரோப்பியர்களாவர். அத்துடன் ரஷ்ய யுவதிகள் இருவர் மற்றும் ஜப்பான் யுவதி ஒருவரும் தாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிசில் முறையிட்டுள்ளனர்.
இதனைவிட மேலும் 13 வெளிநாட்டவர்கள் சுற்றுலாவின் போது தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளதாக பொலிஸ் தரவுகள் கூறுகின்றன.
சுற்றுலா பயணிகளை ஏமாற்றியமை தொடர்பிலும் 20 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மிக முக்கிய வருமான மார்க்கமாக கருதப்படும் சுற்றுலா துறையில், சுற்றுலா பயணிகளுக்கான இவ்வாறான அச்சுறுத்தல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் அவதானிகள், இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

Leave a comment