Post

Share this post

முல்லேரியா சிறுவன் மரணம் – சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

முல்லேரியா – ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் மரணம் தொடர்பில் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சிறுவன் ஜொனாதன் மார்க் பொன்சேகாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் பணியாளர் தனது வாக்குமூலத்தின் போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.
சிறுவன் உண்மையில் கண்ணாடி போத்தல் துண்டுக்களால் ஏற்பட்ட வெட்டுக் காயங்களால் உயிரிழக்கவில்லை எனவும் புல் வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக சிறுவனை தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் தாம் பீதியடைந்தமையினால் உடைந்த கண்ணாடி போத்தல்களின் துண்டுகளை சிறுவனின் உடலின் அருகில் வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 08ஆம் திகதியன்று முல்லேரியா – ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகாவின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (09) சந்தேகத்துக்குரிய புல்வெட்டும் பணியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த ஐந்து வயது சிறுவன் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக காயங்களுக்கு காரணமாக கருதப்பட்ட உடைந்த கண்ணாடி போத்தல் துண்டுகள் சிறுவனின் உடலில் இருந்து நான்கு அடி தூரத்தில் கண்டெடுக்கப்பட்டன.
எனினும் அந்தத் துண்டுகளுக்கு அருகில் இரத்தக்கறைகள் எதுவும் காணப்படாததால் சந்தேகம் எழவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே புல்வெட்டும் இயந்தியரத்தின் கத்திகள் தவறுதலாக தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த மரணம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சிறுவன் தாத்தா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரான புல் வெட்டும் பணியாளர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment