OOSAI RADIO

Post

Share this post

ஹமாஸின் போா் நிறுத்தம் – இஸ்ரேல் நிராகரிப்பு!

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள செயல்திட்டத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக ஹமாஸ் அமைப்பினா் முன்வைத்துள்ள செயல்திட்டம் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.

போரை நிறுத்துவதற்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்காக ஹமாஸ் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்தும் அபத்தமாக உள்ளன.

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீா்வு, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் முழுமையான வெற்றியை அடைவதுதான். இன்னும் சில மாதங்களில் அத்தகைய வெற்றியை இஸ்ரேல் பெற்றுவிடும்.

காஸாவில் ஹமாஸ் படையினரை விட்டுவைத்தால், அவா்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து மீண்டும் படுகொலையில் ஈடுபடுவாா்கள் என்றாா் அவா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

இந்தச் சூழலில், மீண்டும் போா் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சுவாா்த்தையை முன்னின்று நடத்திவரும் கத்தாா் கடந்த வாரம் அறிவித்தது.

போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான செயல்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்பது குறித்து ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது என்று கத்தாா் அதிகாரிகள் கூறினா்.

அதன் தொடா்ச்சியாக, காஸாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பான தூதரக முயற்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் மேற்கு ஆசிய நாடுகளில் கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இது, காஸாவில் மீண்டும் போா் நிறுத்தம் அறிவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டத்தை பரிசீலித்த ஹமாஸ் அமைப்பினா், பதிலுக்கு தங்களது செயல்திட்டத்தை புதன்கிழமை வெளியிட்டனா்.

அதில், காஸாவில் 135 நாள்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பது, இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக கடத்திவரப்பட்ட அனைவரையும் விடுவிப்பது, காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினா் வெளியேறுவது, போா் முடிவுக்குப் பிந்தைய நிலை குறித்து இரு தரப்பிலும் ஒப்பந்தம் மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த செயல்திட்டத்தை இஸ்ரேல் அரசு பரிசீலிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதனை ஒரேடியாக நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது தெரிவித்துள்ளாா்.

தனது அரசியல் லாபத்துக்காக காஸாவில் போரைத் தொடர பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாக ஹமாஸ் அமைப்பும், கத்தாா் அதிகாரிகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸா சிட்டி, பிப். 8: காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,840 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 130 போ் உயிரிழந்தனா். 170 போ் காயமடைந்தனா்.

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,840 ஆக அதிகரித்துள்ளது. குண்டுவீச்சில் இதுவரை 67,317 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter