Post

Share this post

மே 9 வன்முறை – இராணுவ அதிகாரிகள் நீக்கம்!

பாகிஸ்தானில் மே 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறையின்போது, இராணுவத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், இராணுவ நிலைகளைப் பாதுகாக்கத் தவறியதாக லெஃப்டினன்ட் ஜெனரல் உள்பட மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
மேலும் மூன்று மேஜா் ஜெனரல்கள், ஏழு பிரிகேடியா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த மே 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது கட்சித் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதில், லாகூா் கமாண்டா் இல்லம், மியான்வாலி விமானத் தளம், ஃபைஸாலாபாதில் உள்ள ஐஎஸ்ஐ கட்டடம் உள்ளிட்ட இராணுவத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகமும் தாக்குதலுக்குள்ளானது.
இது தொடா்பாக ராணுவம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இராணுவ செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் மேஜா் ஜெனரல் அா்ஷத் ஷெரீஃப் திங்கள்கிழமை கூறியதாவது: இராணுவ நிலைகள், ஜின்னா இல்லம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றை தாக்குதலிலிருந்து பாதுகாக்கத் தவறியதற்காக மூன்று ராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் 10 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி வன்முறையானது நாட்டின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகும். வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.

Leave a comment