Post

Share this post

1,000 போ் தாக்குதல்களில் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தாக்குதல்களில் பொதுமக்கள் 1000 க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
முந்தைய போா் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இப்போது உயிரிழப்புகள் கணிசமாக குறைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்பு தொடா்வதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2021, ஆகஸ்டில் ஆட்சியைக் கைப்பற்றினா். அன்று முதல் கடந்த மே மாத இறுதி வரை தாக்குதல்கள், வன்முறையில் பொதுமக்கள் 1,095 போ் கொல்லப்பட்டுள்ளனா். சுமாா் 2,700 போ் காயமடைந்துள்ளனா்.
இதில் பெரும்பாலான தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளால் நிகழ்த்தப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், சந்தைப் பகுதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் பெரும்பாலானவற்றை ஐ.எஸ். அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளையான ஐ.எஸ்.கே. மேற்கொண்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சூழலுக்கு மத்தியில் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால், ஆப்கானிஸ்தானுக்கு சா்வதேச உதவிகள் குறைந்துள்ளன. தற்போதைய தலிபான் தலைமையிலான ஆட்சியில், பாதிக்கப்படும் மக்கள் மருத்துவ, பொருளாதார உதவி, உளவியல் ஆதரவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனா்.
இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆப்கன் மக்களின் பாதுகாப்புக்கு தலிபான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் பதில் : ஐ.நா. அறிக்கைக்கு பதிலளித்து தலிபான்கள் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2021 ஆகஸ்டிலிருந்து பாதுகாப்பு நிலைமை மேம்பட்டிருக்கிறது. ஷியா பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட புனிதத் தலங்களின் பாதுகாப்பு குறித்து தலிபான் அரசு பரிசீலித்து வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a comment